பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

327


ஆடுவதில் பயனில்லை. மாசு நீங்கப் பிறவிப் பெருங்கடலில் மூழ்கலும், வினை மாசு விலக இறைவனின் அருள் நோக்கத் தீர்த்தத்தில் ஆடுதலும் உய்யும் நெறி. இத்திருப்பாடலில் ‘தீர்த்தன்’ என்றதால் தீர்த்தத்தையும் ‘நற்றில்லைச் சிற்றம்பலம்’ என்றதால் தலத்தையும், ‘கூத்தன்’ என்றதால் மூர்த்தியையும் எடுத்துக்காட்டி விளக்கினார். தீர்த்தம், தலம், மூர்த்தி ஆகிய முறையே ஆடி, வலம் வந்து, வாழ்த்துவாருக்கு எளிதில் திருவருள் கூட்டும். இம்மூன்றும் வெவ்வேறாக இல்லாமல் ஓருருவமாக விளங்கும் ஆடல் வல்லானின் எடுத்த பொற் பாதத்தைப் போற்றுதல் துயர் நீக்கும்; இன்பத்தைக் கூட்டுவிக்கும்; எடுத்த பொற்பாதத்தை இதயத்தில் ஏத்தி வழிபடுவோமாக!

பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தவினால்
எங்கள் பிராட்டியு மெங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

13

மார்கழித் திங்கள், பாவைநோன்பு நோற்கும் மகளிர் பூஞ்சுனையில் ஆடி விளையாடுகின்றனர். பூஞ்சுனையிலாடும் மகளிர் காணும் காட்சியனைத்தும் திருவருட் காட்சியாக விளங்குகின்றன. அவர்கள் குடைந்தாடி மகிழும் பூஞ்சுனையைச் சிவசக்தியாகப் பாவித்து ஆடுகின்றனர். பைங் குவளைக்கார் மலர். கருமை நிறமுடையதானாலும் நீல நிறத்தில் தோற்றமளிக்கிறது. நமையாளும் அருட் சக்தியின் நிறம் நீலம். ‘செங்கமலப் பைம் போது’ என்றதால் செம்மேனி உணர்த்தப் பெற்றது. நீலநிறத்ததாகிய அருட்சக்தி தண்ணருளையும், சிவப்பு நிறத்ததாகிய சிவம் வெவ்விய ஆற்றலையும்