பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

331


போகத்தில் திளைத்து அயரும்பொழுது திருவருள் நினைப்பினைத் தந்து பக்குவத்தை வளர்த்து அருட்சக்தியாய் நின்று இன்பம் ஊட்டுவாள்! மறைப்பதும் அருட்சக்தியே! அருளுவதும் அந்த அருட் சக்தியே! என்பதை விளக்கப் “பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை” என்றார். மறைக்கும் ஆற்றலாய் உடன்நின்று வினைப் போகத்தில் அழுத்தம் பண்ணி உயிரைப் பிணித்து நிற்கும் மலம், துய்ப்பின்வழி ஆற்றலை இழக்கிறது. வளர்த்தலாவது, உயிரை இன்பதுன்பத்தை நுகரச் செய்தல். அதேபொழுது வினைப் போகத்திலேயே ஆழ்ந்திடாவண்ணம் உரிய நேரத்தில் எடுத்தணைத்து ஏற்றம் தருதலை ‘எடுத்தல்’ என்றார். அருட் சக்தியை வணங்குதல் இருளை நீக்கும்; இன்பம் தரும்.

ஓரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகா லோவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்
ஆரொருவ ரிவ்வண்ண மாட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

15

இத்திருப்பாட்டில் இறைவனின் திருவருள் வசப்பட்ட ஒரு பெண்ணின் சொல்லையும் செயலையும் விளக்குகிறாள் பிறிதொரு பெண். அந்தப் பெண் அறிவிப்பது போல் அடிகளே அறிவிக்கிறார். சிவபெருமானிடம் தலையன்பு கொண்ட பெண்ணொருத்தியின் தன்மைகளை எல்லாப் பெண்களும் உணரும் வண்ணம் ஒருத்தி விளக்கும் முறையில் பாடல் அமைந்துள்ளது.

சிவனருள் திறத்தில் ஆழ்ந்த மூத்த நிலையில் நிற்கும் இவள், சில சமயத்தில் “எம்பெருமானே” என்று பல முறை