பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரற்றுகிறாள். அவனே, “நம் பெருமான்” என்று அவன் புகழை இடைவிடாது வாயினாற் பேசுகிறாள்; சிந்தை மகிழ்ச்சியில் பொங்கப் பேசுகிறாள்; கண்களில் நீர் பொழிய நின்று பேசுகிறாள்; நிலத்தில் வீழ்ந்து வணங்குகிறாள்; இடையில் மாய்மாலம் காட்டும் தேவர்கள் யாரையும் வணங்கமாட்டாள். இறைவனுக்குப் பித்தானார் செயல் இது போலும்! இந்நெறியில் ஆட்கொள்ளும் அந்த வித்தகர் யார்? அந்த வித்தகரை-ஞான வடிவினரின் திருவடிகளை வாயாரப் பாடிப் புனலில் ஆடுவோமாக என்று அழைக்கிறாள்.

தலைவன் நாமத்தைத் தலையன்பு பூண்டோர் பித்தேறி அரற்றுதல் இயற்கை அதிலும், மங்கையர்க்கும் மங்கையர் மனம் பெற்றோர்க்கும் இயல்பானது. இறைவன் திருநாமத்தை இடைவிடாமல் சொல்லுவதிலேயே இன்பம் தோன்றுகிறது. “நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே!” என்புழி மறத்தல் இல்லை. இறைவன் திருநாமத்தை இடைவிடாமல் சொல்லுவதால் சித்தத்தில் களிப்பு மிகுகின்றது. அவ்வழி கண்கள் இரண்டிலும் ஆனந்த அருவி வழிகிறது. இந்த மெய்ப்பாட்டு நிலையை அடைந்தவர்கள் உயிர் நாயகனாக - தலையளித்து ஆளும் தலைவனாகச் சிவத்தினையே கொள்வர்; சென்று-சிறு தேவதைகளை வணங்கார்; விண்னோரைப் பணியார்.

“கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடி கெடினும்” என்பது திருவாசகம். இறைவன், “எவ்வுயிர்க்கும் உடைமையாளன்; நம்பெருமான்” என்றும் அதே பொழுது தம்முடைய தனி உரிமை பாராட்டும் உணர்வில் “எம்பெருமான்” என்றும் கூறுகிறார்.

இத்திருப்பாடலில் முத்த நிலையை எய்திய உயிர், மனம், மொழி, மெய்களால் ஒருசேர ஒரு நிலையில் இறைவனை வாழ்த்தி வணங்கும் பெற்றிமையை விளக்கும் திறம், அருமையுடையது. “நம்பெருமான் சீரொருகால்