பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இன்னும் முறையாகக் கன்னிப் பெண்கள் பாவைப் பாடல் பாடி, நீராடி நோன்பு நோற்றால் வான்மழை தவறாது பெய்யும். இது சத்தியம்! நமது குன்றக்குடியில் கடந்த பத்தாண்டுகளாக இசைஞானியார் மாதர் சங்கத்தினர், மார்கழித் திங்களில் நாட்காலை நீராடிப் பாவை நோன்பு நோற்று வருகின்றனர். குன்றக்குடியில் மழை பொய்த்த தில்லை. தமிழக மகளிர் பாவைப் பாடல்களைப் பாடிப் பாவை நோன்பு நோற்றால் மழை பொழிவது உறுதி.

பாவை நோன்பின் பொதுப்பயன் வான்மழை சுரத்தலும், நாடு வளம் பெறுதலுமாகும்; சிறப்புப் பயன் திருவருட்பேறு. மண்ணில் வளம் இன்றேல் உயிர்களின் வினை நீக்கத்திற்குரிய துய்ப்பனவும் உய்ப்பனவும் கிடைக்காதன்றோ! துய்ப்பு இல்வழி வினைப்போகம் நீங்காது. ஆதலால், மன்னுயிர் உய்தியும், மண்ணின் வளமும் இணைப்புடையன. துய்ப்பனவும் உய்ப்பனவும் இல்லாத வழி துறத்தலும்கூட இல்லை. இஃதொரு சிறந்த வாழ்வியல் உண்மை. நம்முடைய சமயம் இந்த அடிப்படையில் அமைந்திருக்கிறது. அதனாலன்றோ, நம்பியாரூரர், “இம்மையே தரும் சோறும் கூறையும்” என்றார். கச்சியப்ப சிவாசாரியாரும்.

“வான்மழை வழாது பெய்க! மலிவளம் சுரக்க! மன்னன் கோன்முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க” என்று அருளிச்செய்தமையை அறிக.

கதிரவனின் ஒளிக்கற்றை வீசும்பொழுது மழையும் பொழியுமானால் கதிரவனுக்கு எதிர்த்திசையில் வானவில் தோன்றும். இங்குச் சிவசூரியன் முன்னிலையில் அம்மையின் அருள்மேகம் கருணைமழை பொழிவதால் சிவசூரியனை நோக்கும் திருப்புருவம் என்னச் சிலைகுலவி என்றார். இறைவன், எம்பிராட்டியை எப்போதும் பிரியாதவன். பொருள், பொருளின் ஆற்றல்-இறை பிரித்தற்கியலாதன. பொருளுக்கு ஆற்றலின்றேல்! இயக்கமில்லை; இனிய