பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

335


பயன்களும் இல்லை. ஆற்றல் பற்றிநின்று தொழிற்படும் பொருள் தேவை. நெருப்பு பற்றி எரிய விறகு தேவை. மின்னாற்றல் சிறந்து தொழிற்பட இயந்திரங்கள் தேவை. இங்குச் சக்தி, ஆற்றல்! சிவம், பொருள்! அதனால் பிரிவில்லை! அம்மையொடு பிரிவில்லா அப்பனை என்றும் தொழுவார்க்கு இன்பம்.

வான்மழை பொழியும்! வளம் சுரக்கும்! பாவைப் பாடல்களைப் பாடுவோம்! இயற்கைப் பூஞ்சுனையில் பாய்ந்து ஆடுவோம்! எம்பிராட்டியின் புகழைப் பாடுவோம்! மாமழை காண்போம்! மண்ணில் வளம் கண்டிடுவோம்! இனிதே வாழ்வோம்! இன்ப அன்பு நெறியில் சென்றிடுவோம்.

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கு மிலாததோ ரின்பநம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்க ணரசை யடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்

17

கன்னிப்பெண்கள் பலர் பூஞ்சுனையில் குடைந்தாடுகின்றர்; இறைவன் புகழ் பாடி ஆடுகின்றனர். அவர்களில் ஒருத்தி குளிருக்கு அஞ்சி கரையிலிருக்கிறாள். அவளை நோக்கிப் பாடியது இந்தப் பாடல். “கொங்குண் கருங்குழலி” என்று அவள் அழைக்கப்படுகிறாள். ஒதுங்கியிருந்தவளும் நற்பெண்! சிந்தையில் வளர்ந்த சிவமணம் பூத்த பெண்ணேயாம்; அவள், “கொங்குண் கருங்குழலி” அதாவது, மணம் பொருந்திய கூந்தலையுடையவள்; நற்பெண்டிர் கூந்தலுக்கே மணம் உண்டு.