பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கொங்குண் கருங்குழலி! இறைவனின் தண்ணருள் நம்முடைய குற்றங்களை நீக்கி நிறை நலம் நல்க - விண்ணவர்கள்பால் இல்லாத ஒரு தனி இன்பத்தை வழங்க நமது இல்லங்களாகிய உடல்கள் தோறும் எழுந்தருளித் திருவடிகளைத் தந்து அருளுகின்ற அருட்டிருச் செல்வன்; வென்றித் திருவுடையான்; அமுதமனையான் நம்தலைவன். நன்மைகள் உண்டாக அவனைப் பாட வருக! பூஞ்சுனையில் நீராடிப் பாடி ஆடிட வருக! என்று அழைக்கின்றனர். இறைவன், உயிர்களின் குற்றங்களைக் கருதிப் புறக்கணிப்பதில்லை; கருணையோடு ஆட்கொள்வான்; உயிர்கள் துன்புறா வண்ணம் குற்றங்களை நீக்கியருள்வான்; குணங்களைக் கொடுத்தாட்கொள்கின்றான்; உயிர்களை ஆட்கொள்வதற்காக உயிர்கள் உறையும் உடல்கள் தோறும் எழுந்தருள்கின்றான்; செங்கமலப் பொற்பாதங்களைத் தந்தருள்கின்றான்.

இறைவன் சேவகன், அவன்தன் வீரம் உயிர்களைக் காக்கிறது. இறைவனுடைய வீரம் அநீதிகளிலிருந்து உயிர் குலத்தைக் காத்தாள்கிறது. மிகவுயர்ந்த தலைவனாகிய இறைவன், மிகத் தாழ்ந்த உயிர்களை நோக்கி இறங்கி வந்து, உயிர்களின் செவ்வி பார்த்து உயிர்கள் உவப்பன செய்து ஆட்கொண்டருளும் திறன் நோக்கிச் ‘சேவகள்’ என்று அருளிச் செய்தார்.

விண்ணோர்கள் நோற்றுப் பெற்ற இன்பம் அதிகார இன்பமே! அதிகாரத்தின் வழி செருக்கு உண்டு. யாதொரு அதிகாரமும் இல்லாதபொழுது எல்லாரும் நல்லவர்களே! ஆயினும் அதிகாரம் கிடைத்தபோது குணங்கள் கெடுதல் இயற்கை அதிகாரம் தொழிற்படும்பொழுது தன்முனைப்புத் தோன்றும்; புகழ்வேட்டையில் நாட்டம் கூடும். ஆதலால், விண்ணோர்கள் செருக்கில் தலைப்பட்டு அழிவதேயன்றி அழிவிலின்பத்தை அவர்கள் ஒருபொழுதும் பெறமாட்டார்கள். விண்ணோர்கள் சிவலோகம் சென்று சிவபெரு