பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

337


மானின் செவ்வி பார்த்து-கருணை நோக்கிக்காத்துக் கிடக்கின்றனர். ஆனால், சிவபெருமானோ நம்மை ஆட்கொள்வதற்காக விண்ணிலிருந்து மண்ணகம் போந்து நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளிப் பொற்பாதங்களைத் தந்தருளுகின்றான் என்றதால், இறைவன் திருவருள், வானோர்க்கு அருமையாகவும், மண்ணில் உள்ள நல்லவர்களுக்கு எளிமையாகவும் கிடைத்திடுவது எண்ணி இன்புறத்தக்கது.

அண்ணா மலையா னடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போற்
கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி யாணா யவியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி யித்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்.

18

இன்று பாடிய திருப்பாட்டில் இறைவன் எல்லாமாய், அல்லதுமாய், அமுதமுமாய் நின்றருளும் இயல்பு பாராட்டப் பெறுகிறது; போற்றப்பெறுகிறது. பெண்ணே! அண்ணாமலை அண்ணலின் திருவடித் தாமரைகளின் திருமுன்பில் அமரர்களின் மணிமுடிகள் ஒளியிழந்து போயின! கதிரவனின் ஒளிக்கதிர் முன்பு இருள் இரித்தோடியது. விண்மீன்கள் ஒளி குன்றிப்போயின! பொழுது புலர்ந்து விட்டது! நமையாளும் பெருமாள் ஆணாகிப், பெண்ணாகி, அலியாகி, வானுலகமாகி, மண்ணுலகமாகி, இவ்வளவிற்கும் வேறாகி, அன்பர்க்கு அமுதமுமாகி நின்றருளும் திருவடிகளைப் பாடிப் புதுப்புனலில் மூழ்கியாடிட வந்திடுக! என்று பேசப் பெறுகிறது!