பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

339


அதேபொழுது வேறாதல் மூலம் தேவைப்படும்பொழுது கடிதலுக்கும், தடிதலுக்கும் உரியதாகி ஒன்றாதல் மூலம் உயிர்நலத்தையே நாடுதலால் இன்பம் விளைவித்தலும் ஏற்புடையதாகிறது.

பெண், ஆண், அலி என்பன அறிவுடைப் பொருள்கள், மற்றயாவும் அறிவிலாப் பொருள்கள். அறிவுடைப் பொருள் இயங்கும்; அறிவிலாப் பொருள்கள் இயங்கா. திருவருள் இவ்விருவகைப் பொருள்களுக்குள்ளும் கலந்து நின்று உயிர்களின் உய்திக்குத் துணை செய்கிறது. இத்திருப்பாடலில் இறைவன் திருவடியைப் புகழ்தலால் திருவருட்சக்தியை வியந்ததாம். உயிர்களைத் தாங்கி அருள் பாலித்திடும் பாங்கு திருவடிப் போதுகளிலேயேயாம். ஆதலால், திருவடிகள் என்றாலும், திருவருள் என்றாலும் ஒரு பொருளே; திருவடிகளைப் போற்றுவோம்! திருவருளை வாழ்த்துவோம்! திருவெல்லாம் பெற்றிடுவோம்!

உங்கையிற் பிள்ளை யுனக்கே யடைக்கலமென்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமா னுனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே யெமக்கெங்கோ னல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.

19

இன்றைய பாவைப் பாட்டு, திருவருள் தோய்வில் ஒன்றாகி நிற்கும் பெண்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கே ஆக்குக! என்று பாடியது.

எங்கள் தலைவனே! “உங்கையிலுள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம்” என்னும் பழமொழியை நின்னிடத்தில் மீண்டும் விண்ணப்பிக்க அஞ்சுகின்றோம். ஐய, ஒரு விண்ணப்பம்! கேட்டருள்க! எங்கள் தோள்கள் நின்