பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குவித்தும் சிரம்மேல் உயர்த்தியும் வணங்குதல் தொழுதலாகும். உள்ளமே தொழுகிறது; உடலின் செயல்கள் மெய்ப்பாடே!

அழுதல்:- இன்ப அன்பு மேலீட்டினால் அழும் அழுகையே அழுகை; ஆக்கத்தில் அழும் அழுகை இது. இறைவனை நினைந்து அழுதல் அன்பினை வளர்க்கும்.

துவள்கை:- உள்ளம் அன்பில் நைந்து உருளுவதாலும், திருவருளின்பத்தை ஆராமையால் மிக்குத் துய்ப்பதனால் நிகழும் மெய்ப்பாடு! அழுதலும், துவள்தலும் சிவஞானிகளின் செயல்! ஆழ்கடல், அலையால் ஆர்ப்பரிக்காது நீர் மட்டம் உயருதல் போல், அன்பர்கள் இறையன்பில் ஆழங்கால்பட்டு அனுபவத்தில் உயர்ந்து வளர்ந்து சென்னியிற் கரங்குவித்து நிற்பர். இஃதோர் உயர்ந்த குறிக்கோள்!

இந்த உயர்ந்த அனுபவத்தைப் பெறுதல் எளிதன்று. இந்த உயர்ந்த அனுபவத்தைப் பெற இறைவனை உள்ளக் கோயிலில் எழுந்தருளுச் செய்ய வேண்டும். அவனுடைய திருவடிகளை மனத்துட்கொண்டு அருச்சித்தல் வேண்டும். அவனுடைய புகழை இசைக்கும் இசையைக் கேட்க வேண்டும். இறைவனை நினைந்து அவனுடைய பெருமையை நினைந்து, கருணையை நினைந்து அழக் கற்றுக் கொள்ள வேண்டும். இங்ஙனம் அழக் கற்றுக் கொள்ளாமல் அருச்சனைகள் பலசெய்து பயனில்லை, அருச்சனை அருளைப் பெறும் கருவியன்று. அழத் துணைசெய்யும் சாதனமே அருச்சனை! ஊண் துறந்து உடலை வெறுத்துத் தவம் செய்து பயனில்லை. “ஐயன் ஐயாறனார்க்கு அன்பால் பொருளில்லை” என்பார் அப்பரடிகள்! “உன்றன் வார் கழற்கு அன்பு எனக்கு நிரந்தரமாய் அருள்வாய்!” என்பார் மாணிக்கவாசகர். அவன் மலைதான்; ஆனால், உளியில் அகப்படும் மலையன்று; அன்பினில் அகப்படும் மலை.