பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மக்கள்-பலர் கன்னியரியல்பில் வந்து வணங்கி நிற்கின்றனர். எம்பெருமானே! பள்ளி யெழுந்தருள்க!”

புண்ணியம் இருவகை. ஒரு புண்ணியம் இன்பத்தைத் துய்த்தற்குத் துணை செய்வது. பிறிதொரு புண்ணியம் இன்பங்களைக் கடந்த திருவருளின்பத்தில் திளைக்கத் துணை செய்வது. இருவகைப் புண்ணியமும், செய்யும் நன்மைகளால், விளைவதேயாம். முன்னையதில்-அதாவது, இன்பங்களைத் துய்க்கச் செய்யும் புண்ணியம் ‘நான்’ என்ற முனைப்பில் செய்யப் பெறுவது; விளம்பர வேட்கையுடையது; புகழ் வேட்டையை நாட்டமாக வுடையது. இக்குண இயல்புகளுடன் செய்யப்பெறும் புண்ணியம். திருவருளைத் தருவதில்லை; மண்ணுலக-அமரருலக இன்பங்களை வழங்கும். இவ்வின்பங்களைத் துய்க்கும் அமரர் வேட்கை தணியாமை கண்டு, பிறவித் துன்பத்திற்குரிய காரணங்கள் மாறாமை கண்டு வருந்தி மண்ணிற் பிறந்து பெருமானைப் பூசித்து சிவத்தொண்டுகள் செய்து, அடியார் பணியை அரன் பணியெனச் சென்று உய்தி பெறுகின்றனர்.

“அணங்கின் மணவாளா!” என்றது, தனக்கென்று யாதோர் உருவமும் இல்லாத இறைவன் உயிர்களுக்கு அருள. உமையொடு கூடிய உருவமே பெறுகின்றான் என்பதை உணர்த்த! மங்கை நாயகரை வணங்குவோர் இம்மையும் பெறுவர்; மறுமையும் பெறுவர்; அழிவிலின்ப வீடும் பெறுவர்!

‘இப்பிறப்பறுத்து எமை ஆண்டருள் புரியும்’ என்ற சொற்றொடரில் உள்ள ‘இப் பிறப்பு’ என்பது இரக்கக் குறிப்புடையது. மாணிக்கவாசகரே, ‘எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்’ என்பார். உயிர், உய்தி பெறுதற்கே பிறப்பு, ஆனால், உய்தி கிடைக்காமையினால் பல பிறப்புக்கள் பிறந்து எய்த்தாயிற்று. இப்பிறப்பு, மிகச்சிறந்த மானுடப் பிறப்பு!