பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

359


முயலாதார் அருமை என்று கூறுதல் வெறும் பொய்! தமது இயலாமையை மறைக்க அறிவார் போல அருமையென்றும் எளிமையென்றும் முரண்படக் கூறுகின்றனர். முரண்பாடுகளே அறியாமையின் சின்னம் தானே!

‘இது அவன் திருவுரு; இவன் அவன் எனவே’ என்ற சொற்றொடர், திருவுருவ வழிபாட்டுத் தத்துவத்தை விளக்குவது. திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருவுருவத்தை உருவமாக எண்ணி வழிபடுவது ஆகாது. சிவமாகவே எண்ணி வழிபடுதல் வேண்டும்.

“திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனி தன்னைச்
சிவன் எனவே கண்டவர்க்குச் சிவனுறைவன் அங்கே”

என்றார் அருணந்தி சிவம். உருவங்கள் வாயிலாக உயிரினை நாடி அன்பு செய்தல் அருளியல் அறிவு.

உயிர் சிவமாகவும், உயிருறையும் உடல் சிவம் எழுந்தருளும் திருக்கோயிலாகவும் எண்ணத் தூண்டுகிறது. சீவன், தனது தன்மைகளை இழந்து சிவத்தின் தன்மையைப் பெற்றுச் சித்தம் சிவமாதலே வாழ்வின் இலக்கு. இதனைக் குமர குருபரர் “பின்னும் ஓர் மாத்திரை குறுகினேன் பின்” என்பார். அதாவது, ‘சீவன்’ என்ற சொல்லில் உள்ள ஒரு மாத்திரை குறைந்து ‘சிவன்’ ஆயிற்று என்பது. சிவன் என்றால் பொருளாற் சிவனல்ல; தன்மையால் சிவன்! சிவத்தன்மை பெற்ற உயிர் தங்கும் பொழுது உடல் விமானம் ஆகிறது.

‘இது வேண்டும்; அது வேண்டும்’ என்று கேட்டு இறைவனை வணங்குதல் கூடாது. நமக்குத் தேவையானவற்றை அறிந்து வழங்குகின்ற அருளிப்பாடு அவனுக்கு உண்டு. அவனால் வழங்கப் பெறாதன யாதானும் உண்டாயின் அவை நமக்கு வேண்டுவன அல்ல. இறைவனைத் தொண்டு கொள்ளும் படியே வேண்ட வேண்டும். தொண்டு செய்யும் உரிமை வழி இன்பம் வந்தமையும். எம்பெருமானை