பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

363



விண்ணவர்களும் காணாத விழுப்பொருள், பெருமான்! மக்கள் தேவர்களை உயர்ந்தவர்கள் என்று நினைக்கின்றனர். விண்ணவர்கள் அறிவு, பதவியின் காரணமாக வளராததால் இறைவனைக் காண முடியவில்லை.

நமது சமயமரபில் நாம் விண்ணகத்திற்குச் செல்வதில்லை. இறைவனை மண்ணகத்தில் நடமாடச் செய்வதே நம்முடைய மரபு. “இறைவனுக்கும் கூட விண்ணில் விருப்பமில்லை.” “வான்பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொள்ளும் வள்ளல்” என்ற திருவாசகத்தால் அறிக! மாணிக்கவாசகரை ஆட்கொள்ள எம்பெருமான் குருமூர்த்தி, குதிரைச் சேவகன், கொற்றாள் என வந்து ஆட்கொண்டருளிய அருளிப் பாட்டினை நினைந்து பாட மொழி ஏது, அதனாலன்றோ “மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே?” என்றார். வாழ்தல் நோக்கமுடையது. நோக்கம் நிறை வேறினால் வாழ்தலுக்குப் பொருளுண்டு. அது வாழ்தல் என்று கருதப் பெறும். “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!” என்பார் மாணிக்கவாசகர். இங்கு மாணிக்கவாசகர் “வாழச் செய்தானே!” என்பதால், அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலக்கி, ஞானாசிரியனாகக் காட்சி தந்து ‘சிவாய நம’ எனச் சொல்லித் தந்து, அச் சொல்லின் பொருளைக் காட்டி, அப்பொருளுக்குத் திருக்கோயில் எழுப்பும் பணியினில் ஈடுபடுத்திக் கொற்றத்தால் வந்த ஏதங்களைத் தடுத்து இனிதே ஆட்கொண்டு அவன்தன் திருவருளின்பத்தில் திளைக்கும் இன்னுயிராக வையகத்தில் பிறந்த உயிர்கள் உய்தி உணர்வைப் பெற்று உணரும் கால எல்லை வரை திருவாசகமாக வாழும் அருளிப் பாட்டினை எண்ணி மகிழ்ந்து ‘வாழச் செய்தானே!’ என்றார்.

குரங்கின் ஆட்டம், களியாட்டம் ஆமோ, அல்லது ஆடற்கலையாமோ? ‘களிப்பு’ என்பது தூய்மையானது; பொறிகளைக் கடந்து புலன்களிற் பொருந்தி, உயிருக்கு இதம் அளிப்பது. களிப்பு. புறத்தே விரிவதன்று; அகத்தே சென்று