பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்போல் கருணையன்

369


ஆட்கொள்கின்றான். தாயுமாகித் தண்ணருள் செய்கின்றான் தோழனாகத் துணை நிற்கின்றான்.

ஆலமர் செல்வனாக, அருட் குருவாக, துறவியாக நின்றும் அருள் வழங்குகின்றான் என்பது கொள்கை. அடிகள் இறைவனை ஐம்பொறிகளால் தொட்டு அனுபவிக்க முடியாததால் “நுகரா நுகர்ச்சியை” என்று பாடுகின்றார். ஆனால் இறைவன் அறிவால் அனுபவிக்கப்படும் பொருள் என்பது தத்துவம் இதனை,

“மாசில் வீணையும் மாலை மதியமும்
விசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”

என்பது அப்பரடிகள் அருள்வாக்கு.

இந்த இன்பங்கள் பொறிகளால் நுகரத்தக்கனவேயாம். ஆனாலும் புலன்களின் அறிவு அமையாதாயின் பொறிகள் துய்த்தற்கியலா! மாசில்லாத வீணையின் இசையைச் செவிகள் உடையார் கேட்கலாம். ஆனாலும் இன்புறுதல் இயலாது. இசைக்கலை அறிந்தாலே நுகர்ந்து அனுபவித்து மகிழலாம். மாலை மதியத்தைக் கண்ணுடையார் அனைவரும் காணலாம். ஆனால் களித்து மகிழ அறிவு தேவை. தென்றலைத் தேகமுடையார் அனைவரும் உணர்ந்து மகிழலாம்; உற்று மகிழ இயலாது. அதற்கு உற்றுணரும் அறிவு தேவை.

ஆதலால், புலன்களின்றிப் பொறிகளுக்குப் பொருள் இல்லை; அனுபவம் இல்லை; பயனில்லை! இறைவன் பேரின்பக் கடல். நுகரா நுகர்ச்சி! அவனைச் சிந்திப்பார். நெஞ்சத்தினின்றும் அவன் அகலான். இதனைப் பட்டினத்தார் “அகறா அகற்சியை” என்பார்.