பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அறிவு, வளரும் இயல்பினது. அதற்கு எல்லை கிடையாது. சாதாரணமாக உலகியலில் அறிவுடையார் யார்? என்று காண்பதே புரியாத புதிர்! அறியாமையே கூடப் போலியாக அறிவு வேடம் பூண்டு ஆரவாரம் செய்வதைக் காண்கின்றோம். இதில் சாதாரண அறிவு கிடக்கட்டும்! வேதங்கள் என்ன ஆயின? என்று கேட்கலாம்.

வேதங்களும் கூட வளர்ந்தும் வளராத உயிர்களின் படைப்புக்கள் தாமே! வேதங்கள் முழுநிலைத் தகுதியுடையன என்றால் அவற்றுக்கு எப்படி உரைகள் மாறுபடும்? சிலர் வேதங்களுக்குப் பெருமை சேர்ப்பதற்காக வேதங்களை இறைவனே அருளிச் செய்தான் என்பர். அஃது ஏற்றுக் கொள்ள முடியாத உண்மை! உபசார வழக்கு-அவ்வளவுதான்!

வேதங்கள் இறைவனைத் தேடியும் காண முடியவில்லை என்பது மாணிக்கவாசகர் வாக்கு. வேதங்கள் கடவுளால் படைக்கப்பட்டன அல்ல. அவைகளால் கடவுளைக் காணவும் இயலாது. கடவுள் வேதங்களையும் கடந்தவன். வேதங்களால் தொடர முடியாதவன் என்பார் பட்டினத்தார்.

“ஆரணம் தொடராப் பூரண புராண”

என்று பாடுகின்றார். கடவுள், பூரணன்! பூரணம் உடைய ஒன்றை பூரணமில்லாத ஒன்று காணவும் இயலாது; காட்டவும் இயலாது. வேதங்கள் காலத்தால் பழைமையானவை. ஆனால், கடவுள் காலத்தைக் கடந்த பழைமையானவன் என்பதை விளக்க “பூரண புராண” என்றார்.

வேதங்களானாலும் சரி, வேறு எந்த நூலானாலும் சரி, உரைகள் காண்பது அறிவுத் துறையில் முயல்வோர் வழக்கு. வகை வகையாக உரைகள் காண்பர்! பின், அவ்விரு வகை உரைகளிடையே மோதல்! இங்ஙனம், வகை வகையாக உரைகள் காண முயல்வார். உரைகளையும் கடந்த