பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனால் எண்ணிலாதனவற்றை உணர்வார்க்கு உணர்த்துகின்றார்!

ஆலமர் செல்வன், வலக்கையின் ஆட்காட்டி விரல் அதாவது சுட்டுவிரலைக் கட்டை விரலுக்குக் கீழாகக் கொண்டு பொருத்தி, மற்றைய மூன்று விரல்களையும் நீட்டியவாறு காட்டி ஏதோ பாடம் சொல்லிக் கொடுக்கிறார்! “சின்னமுத்திரை” என்று சொல்லப்படுகின்ற இந்த முத்திரையைப் பற்றிக் கவிஞன் பாடத் தொடங்கினால் நூறு பாட்டுக் கூடப் பாடலாம்!

ஞானம், மோனத்திலே காட்டும் படிப்பினை என்ன? சுட்டுவிரல் மடங்குகிறது. சுட்டிக் காட்டப் படுதல் பெருமையின் சின்னம்! புகழின் அடையாளம்! மனித உலகம் அலமருவதெல்லாம் சுட்டிக் காட்டும் சொல்லைப் பெற வேண்டியே! அதனாலன்றோ, இன்று மனித உலகம் புகழ் வேட்டைக் காடாக விளங்குகின்றது.

ஆதலால், புகழினைப் பெறும் அவாவினை, ஞானத்தினை நோக்கி மடைமாற்றம் செய்தல் வேண்டும். கடவுளை நாடிச் செல்லும் ஆன்மா-உயிர் மோனத்தில் அமரும். மோனம் என்பது உயர்நிலை! செயலின்மையெல்லாம் மோன நிலையாகாது! வாயினால் பேசாமையெல்லாம் மோன நிலையாகாது.

சிலர் “இன்று மெளனம்” என்பர். ஆனால், அன்றுதான் அவர்களின் பொறிகளும், புலன்களும் வேகமாகத் தொழிற்படும். அதில் என்ன பயன்? சும்மா இருத்தல் என்பது உயர் ஞானக் கலை! உயிர் உடல் மற்றும் அறிதல் கருவிகள், செயற்கருவிகள், உணர்வுக் கருவிகள் அனைத்தும் ஒரு நிலையில் ஒன்றித்து, அடங்கி அனுபவத்தில் திளைத்தலே மெளனம். இதையே அனுபூதி என்பர்.