பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொலைவுக்குத் தெரியும்! தோட்கப்படாத செவிகளுக்கும் கேட்கும் வகையில் மணிகள் ஒலி செய்யும். ஆதலால், திருக்கோயிலைக் கண்டவுடன் தொழுக! ஆலய மணி ஒலி கேட்டவுடன் தொழுக! அப்படித் தொழாஅத தூஉம் பிழை. இவை அடிகள் காட்டும் பிழைகள்! இப் பிழைகளிலிருந்து கிளைத்தெழும் பிழைகளும் உண்டு. பிழைகள் நீங்க வில்லையானால் பிழைகளைத் தொடர்ந்து பழி வரும்; பழி, பாவத்தைத் தரும்; பாவம், நரகத் துன்பத்தைத் தரும். ஆதலால், பிழைகளைத் தவிர்த்து வாழ முயல்க!

பிழைகளைத் தவிர்ப்பது எளிதன்று. பழக்கம் மிகமிகக் கொடிது. உயிரின் அறிவு பழக்க வாசனையின் வழியிலேயே செல்லும், தீய பழக்கங்களிலிருந்து உயிரை நேரடியாக மீட்பது எளிதன்று. மீட்கும் பணியைவிட உயிர்க்கு நலம் பயக்கும் பழக்கங்களில் ஈடுபடுத்துதல் நன்மையைத் தரும்; மீட்பாகவும் அமையும், தீமையும் எளிதாக விலகும். பிரார்த்தனை என்பதே பிழைகளை நினைந்து வருந்தி நல்லறிவு வேட்டலேயாம்.

“யானே பொய்என் நெஞ்சும்

பொய்என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால்

உன்னைப் பெறலாமே!”

என்று மாணிக்கவாசகர், பாடுகின்றார்.

ஆதலால், பிழைகளைத் தவிர்த்து வாழப் பிரார்த்தனை செய்க! உயிர்களைப் பிழைகளிலிருந்து மீட்பது பிரார்த்தனையே! பிழைகளைத் தவிர்க்கப் பயன்படும் பிரார்த்தனையே இன்று பிழைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன. தீவினையை நினைந்து வருந்த வேண்டியதிருக்கிறது.

இறைவனின் சந்நிதியில் பொன்னும் பொருளும் புகழும் வேண்டிப் பிரார்த்தனை செய்தல் பிழையென்பதை அறிக! ஆதலால், பிழைகளைத் தவிர்த்திட முயலுக!