பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிழை தவிர்த்தாளும் பெருமான்!

387


அறியாமையை அகற்றுக! நல்ல ஞான நூல்களை-கற்க! கருதுக! இறைவனை நினைந்து கசிந்துருகி அழுக! தொழுக! உய்வு பெறுக.

நாம் மனிதர்கள்தாமே! நம்முடைய அறிவு, ஆற்றல் எல்லைக்குட்பட்டவை. நாம் வாழும் சமுதாய அமைப்பு செப்பமில்லாதது. ஆதலால், நாமே பிழைகளிலிருந்து முற்றாக விடுதலைபெற இயலாது. முயன்றாலும் அது சேற்றுக் குட்டையிற் சிக்கிய மாடு கரை ஏறியதைப் போலத்தான்! அதற்காகப் பிழைகளைத் தவிர்க்கும் முயற்சியை விட்டுவிடக் கட்டாது.

முற்றாக நம்மைப் பிழைகளிலிருந்து நீக்கித் தவிர்த்தாளும் தண்ணளி பெரும்ானுக்கு உண்டு. அவன் பொறுத்தருளாது போனால் நமக்கேது உய்தி? குன்றே அனைய குற்றங்களைக் குணமாகக் கொண்டு ஆட்கொள்ளுதல் அவனுடைய கருணையின் செயல்! அவன் உயிர்கள் நோகாவண்ணம் பையத் தாழுருவித் தண்ணளி செய்திடுவான்.

“கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!

பட்டினத்தார் வழியில் நாமும் பிழைகளை நினைந்து வருந்துவோம்! பிழைகளைத் தவிர்த்து வாழ்ந்திடுவோம்!