பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கவலைப்படாமல் செய்திருக்கலாமே! “குதிரைகள் வருகின்றன!” என்று சொல்வானேன்? “போலியாகக் குதிரைகளைக் காட்டுவானேன்?” என்ற கேள்விகள் எழலாம்.

ஆம்! கேள்விகள் ஏற்புடையனவே! இந்தச் செய்தியை அரசன் பாண்டியன் அணுகு முறையிலிருந்து அவன் குதிரை வாங்குவதில் பெரிதும் நாட்டமுடையவனாக இருக்கிறான் என்பதை உணர்ந்த இறைவன், அது தவறு என்பதைக் கொஞ்சம் கடுமையான முறையில் உணர்த்தக் கருதியே தொடக்கத்திலேயே கூறவில்லை. ஆனால், வரலாற்றுப் போக்கு வினாவுக்கு விடை காணும் திசையிலேயே செல்கிறது.

படிப்பினை

இறைவன் நரிகளைப் பரிகளாக்கி நடத்திச் சென்றான். பகலில் பரிகளாக இருந்த அவை இரவில் நரிகளாகிவிட்டன. பகற்பொழுதை இம்மையாகவும் இரவுப் பொழுதை மறுமையாகவும் கூறுவது மரபு.

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”

என்னும் குறள் இங்கே உணரத்தக்கது. பகலில் இன்பம் பயக்கும் பரிகள், இரவில் நரிகளாகித் துன்பம் விளைவிக்கும் என்ற தத்துவம் உணர்த்தப்பெற்றது.

கொற்றாளாக வந்த இறைவன் ஏன் ஒழுங்காக வேலை செய்யவில்லை? இறைவன் கொற்றாளாக வந்தது எடுத்துக் காட்டுமூலம் மக்களுக்குக் கற்பிக்கவே யாம். அதனால், வேலையை நன்றாகச் செய்யாது போனால் உதை கிடைக்கும் என்ற பாடம் படிப்பிக்கப் பெறுகிறது. இது எதிர்மறையாக அணுகிக் கற்பிக்கும் முறை.