பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைதியாக எதையும் பார்க்கும்-அநுபவிக்கும் ஆற்றலற்றவர்களாகப் பலர் இருப்பார்கள். தாமும் மாறுவார்கள். பிறரையும் தம் வழி மாற்ற முயற்சிப்பார்கள். எல்லாவற்றையும் தாமே தாங்குவது போல எண்ணிக் கவலைப்படுவார்கள். அஃது ஆன்மீக வளர்ச்சியின்மையின் சின்னம். இதற்கே ‘இருந்தபடி இருங்கள்’ என்று ஆணையிடுகின்றார். இருந்தபடி இருப்பதென்றால் உடலால் சோம்பியிருப்பதைச் சொல்லவில்லை. அதற்குப் பெயர் சோம்பேறித்தனம். ‘சித்தம் அடக்கிச் சிவாயநம’ என்று இருப்பதையே இங்ஙனம் கூறுகிறார்.

“நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே”—என்று இருத்தலே

இருந்தபடி இருத்தல் என்பதாம். இங்ஙனம் ஆழ்ந்தால் முருகனைத் தேடிச் செல்லவேண்டாம். அவன் திருவருளைத் தேடி அடைய வேண்டாம். வேல் தாங்கும் முருகனின் திருவருள் வலியத் தானே வந்து வெளிப்படும் என்கிறார் அருணகிரியார். ‘அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே’ பாடலை முழுதும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

“தடுங்கோள் மனத்தை; விடுங்கோள்
வெகுளியை; தான மென்றும்
இடுங்கோள்; இருந்தபடி இருங்கோள்
எழுபாரும் உய்யக்
கொடுங் கோபச் சூருடன் குன்றந்
திறக்கத் துளைத்தவை வேல்
விடுங்கோள் அருள்வந்து தானே
உமக்கு வெளிப்படுமே.”

இப்பாடலை முறையாகச் சிந்தித்து அவன் அருள் நம்மிடை வலிய வந்து மேவி நின்று விளங்கிப் பயன்தரும் வண்ணம் வாழ முயற்சிப்போமாக!