பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25


பரபரக்காதே


வாழ்க்கையில் ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி பெற்று அமைதியும் இன்பமும் சூழ வாழ விரும்புவோமாயின் பரபரப்புணர்ச்சி கூடாது. அவசரக் கோலத்தில், பரபரப்புணர்ச்சியுடன் ஒன்றைப் பற்றி முடிவெடுப்பதும் செய்வதும் நல்லதல்ல. அவசரப்படுதல் என்ற குணத்தைக் கெட்ட குணங்களின் வரிசையிலேயே வைத்து மூத்தோர் முடிவு செய்திருக்கிறார்கள்; மோசடி செய்யும் இயல்புடையவர்களும் ஏமாற்றுகிறவர்களுமே அவசரப்படுவார்கள். அவர்களுடைய நட்பும் அவசரமானதாக இருக்கும்; அவர்களுடைய அன்பும் அவசரமானதாக இருக்கும். அதுபோல அவர்கள் காட்டும் பகைமையும் அவசரமானதாகவே இருக்கும். பிராங்லின் என்ற ஆங்கிலச் சிந்தனையாளன் “Fraud and deciet are ever in hurry” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவசரப்படுகிறவர்கள், வாழ்க்கையில் பல தவறுகள் செய்கிறார்கள். நல்லவர்களைப் பகைவர்களாக மதித்து விடுகின்றனர்-பகைவர்களை நல்லவர்களாக மதித்துவிடுகின்றனர். இதன் காரணமாக வாழ்க்கை சுவையற்றதாகி விடுகிறது. அதுமட்டுமல்ல-வாழ்க்கையில், ஆற்றல் இழப்பும் பொருள் இழப்பும் ஏற்படுகின்றன. மோசடி எண்ணமும் தந்திரபுத்தியும் உடையவர்கள் மிக அவசரமாக மேவிப்