பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பரபரக்காதே

399


நம்முடைய வாழ்க்கையையும் வாழ்க்கைப் போக்குகளையும் பரபரப்பில்லாத உணர்வுடன் ஆராய்ந்தறிய நம்மை நாம் பழக்கிக் கொள்ள வேண்டும். ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று முடிவெடுப்பதில் அவசரப்படக் கூடாது. அந்த அவசரமுடிவால் நாமே பல நல்லவர்களைக் கெட்டவர்களாக்கி விடவும் முடியும். கெட்டவர்களை நல்லவர்களாக்கி விடவும் முடியும். கெட்டவர்களை நல்லவர்களாக நினைத்து அல்லற்படவும் நேரும்.

எந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த உடனாவது அல்லது பிறருடைய வாழ்த்து, வசை முதலியவற்றைக் கேட்டவுடனாவது அவசரப்பட்டு முடிவெடுப்பது நல்லதல்ல. ஒவ்வொன்றுக்கும் இருக்கிற காரண காரியங்களையும் உள்நோக்கங்களையும் சூழ்நிலைகளையும் ஒரு தடவைக்கு மூன்று தடவையாவது அமைதியாக ஆராய்ந்து முடிவெடுத்துப் பழகுவதும் செய்வதுமே நல்லது.

ஆராயும் மனப்பண்பு

அவசரப்படக் கூடாது என்ற அளவிலேயே அமைதியாகக் காலங் கடத்துவது என்பது பொருளல்ல. வாழ்க்கையில் தெளியும் உறுதியும் பெற, ஆராய்கின்ற மனப்பண்பு தேவை. வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தனித்தனியே வைத்துப் பார்த்து நன்றா தீதா என்று முடிவு செய்வது நல்லதல்ல-இயல்புமல்ல. மனித மாண்புகள் பற்றிப் பேசும் வள்ளுவம் இந்த அறிவுபற்றித் தெளிவான வழிகாட்டுகின்றது. குணங்களை அறிந்து கொள்க! குற்றங்களையும் அறிந்து கொள்க! பின் அவற்றுள் மிகை எது என்று கணக்கெடுத்து முடிவெடுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதே வள்ளுவத்தின் கருத்து. நாடி ஆராய்வதிலும் குணங்களையே முதன் முதலில் ஆராய வேண்டும் என்று வள்ளுவம் பேசுகின்றது.

இன்றைய வாழ்க்கை முறையில் பலர், குணங்களைப் பார்க்க மறுக்கின்றனர். குற்றங்களையே நாடுகின்றனர். குணங்களை மறைத்துக் குற்றங்களையே பேசுகின்றனர்.