பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26


குமரகுருபரரின் உயிர்க்கொள்கை


வாழ்வியலுக்குத் தத்துவ இயல் தொடர்புடையது. தத்துவத் தெளிவே வாழ்வியலுக்கு நல்ல அடிப்படை வாழ்வியல் இயக்கத்தில், குழப்பத்தைத் தவிர்த்து நன்னெறியில் படர்வது தத்துவத் தெளிவிருந்தாலே சாலும். இன்று உலகில் பல சமயங்கள், சமயங்களிடையே தத்துவங்கள் வேறுபடுகின்றன. அதனால் தத்துவப் பயிற்சியே தலை வலியாகி விடுகின்றது. ஆனால், தத்துவ இயலில் அறிவியல் ஆய்வு நிகழவும், தெளிந்த முடிவுகளை எடுக்கவும் முடியும்; ஒரே சமயநிலைக்குக்கூட நாம் வர இயலும். ஆனால், மதத் தலைவர்கள் இதனை விரும்பமாட்டார்கள். இன்று மதம் என்ற அமைப்பு அறிவியலிலிருந்து விடுதலை பெற்றுவிட்டது. மிகவும் இறுக்கத் தன்மையுடையதாகிவிட்டது. நெகிழ்ந்து கொடுக்கும் போக்கு மதத் தலைவர்களுக்கிடையில் இல்லை! ஏன்? மதங்களின் குறிக்கோளாகிய மனிதகுல ஒருமைப்பாடு இன்று மதங்களில் இல்லை. மதமே ‘மத’மாக இடம் பெற்று விளங்குகிறது. இது வாழும் உலகத்திற்கு நல்லதல்ல.

தத்துவம் என்பதற்கு உள்ளது என்று பொருள். எவை எவை உள்ளவையோ அவ்வவற்றை ஆய்வு செய்வது தத்துவ ஆராய்ச்சி. உள்ளவைகளை - உண்மைகளைப் பற்றிய அறிவே தத்துவ அறிவு; தத்துவ ஞானம். உலகத்தார் உண்டு