பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நம்முடைய நாட்டில் சொற்கள் ஏராளம்! சொல்லுபவர்களும் ஆயிரமாயிரம் பேர்கள்! ஏன், வாய் படைத்தவரெல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றனர்; பேச ஆரம்பிக்கின்றனர். வாய் படைத்தவருக்கெல்லாம் பேசும் உரிமை இருத்தல் கூடாது. வாய்மையுடையவருக்கே பேசும் உரிமை இருத்தல் வேண்டும்.

இன்று சொற்களை வழங்குவோரிடத்திலும் நலன் நாடும் வேட்கையில்லை. சொற்களைக் கேட்பவர்களிலும் கூடப் பலர் செவிக்கினியவற்றையே விரும்புகின்றனர். அதனால், எங்கும் முகமனுரைப்பவர்கள் அதிகமாகி விட்டனர்.

முகமன் என்பதே முகத்திற்காகச் சொல்வதுதான்! முகமன் கூறுகிறவர்களில் பெரும்பாலோர் போலிகள்! தன்னல உணர்ச்சியுடையவர்கள். அவர்களுக்கு வாழ்விக்கும் நோக்கமில்லை. இந்த நூற்றாண்டில் புகழ்தல் ஒரு கலையாகவே போய்விட்டது. ஏன், சிலருக்கு அது தொழிலும் கூட!

புகழுக்கே இலக்கணம் நேரில் சொல்வதன்று. புகழுக்குரியவன் இல்லாத இடத்தில் பலரறியப் புகழைப் பறைசாற்றி அது செவிக்குச் செய்தியாக வரும் பொழுது புகழாகிறது. அதுவும் கூடப் பயனைத் துய்த்தவர்கள் அனுபவித்தவர்கள் கூறுவதுதான் புகழ்.

நம்மை நாள்தோறும் சுற்றிக் கொண்டிருப்பவர்கள்-நத்திப் பிழைத்துக் கொண்டிருப்பவர்கள் சொல்வது புகழன்று. பழங்காலத்துச் சான்றோர்கள் தற்யெலாகத், தம்மை யாராவது புகழ்வதைக் கேட்டுவிட்டால் அந்தப் புகழைக் கேட்க வெட்கப்பட்டார்கள். தம் புகழ் கேட்க நாணுவர் என்பது சங்கத் தமிழ் நல்லுரை.

புகழ் விருப்பம் மிகுதியும் வந்து விட்டதால் நல்லதைக் கேட்கும் பழக்கும் அருகிவிட்டது. செவிகைப்பச் சொற் பொறுக்கும் சால்பு இன்று காண்டற்கரியதாகிவிட்டது.