பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தாம் முயன்று மென்று அறைத்துச் சுவை கூட்டி நாக்கிற்கு வழங்குகின்றது. எளிய முயற்சியில் நாக்கு சுவைக்கிறது.

நாக்கினால் பற்களுக்கு யாதொரு பயனுமில்லை. ஆயினும் பற்கள் முயன்று நாக்குக்குச் சுவை கூட்டி வழங்குகின்றன. அதுபோல ஒவ்வொருவரும் முயன்று மற்றவர்களுக்கு வாழ்க்கையை வழங்க வேண்டும்.

‘உதவி செய்யும் வாழ்க்கையின் மூலம் நெடிய பயன் விளையும்; அழிவிலின்பம் கிடைக்கும். ஆயினும் சில துன்பங்கள் வராமல் போகா. அத்துன்பத்தினையும் ஏற்று மெய்வருத்தமுற அரிதின் முயன்று உதவி செய்தலே நல்லோர் கடமை. அத்தகைய உதவி வையகத்து வான்மழையைப் போல!

அறிவறிந்த ஆள்வினையை மேற்கொள்க! உடல் களைப்புறும் வரையில் உழைத்திடுக! பழியஞ்சிப் பொருளீட்டுக! ஈட்டிய பொருளை உதவி செய்தல் என்ற உயரிய வேள்விக்குப் பயன்படுத்துக! வாழ்வித்து வாழ்க!

“கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம்செய்வர்-அம்மா!
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று”

என்பது நன்னெறி ஆசிரியர் வற்புறுத்தும் நெறி.