பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அளப்பரியது. அந்நியரையும் “தமிழ் மாணவர்” ஆக்கிய பெருமை தமிழுக்கு உண்டு.

தமிழகம் புகழ் பெற்று விளங்கிய நாடு. தமிழ் வளம் கெழுமிய மொழி. தமிழினம் சிந்தையில் சிறந்து விளங்கிய இனம். தமிழ் நாட்டின் பெருமை, தமிழினத்தின் பெருமை மெய்ப்பொருள் சார்பு. தத்துவ நூல்கள் பலப்பல தலைமுறை தோறும் வந்து கொண்டிருந்தன.

தமிழ் நாட்டில் காவிரிப்புனல் சூழ்ந்த நாடு வரலாற்றில் இடம் பெற்ற நாடு அல்ல. வரலாற்றை எழுதிய நாடு. காவிரியைக் கங்கையில் புனிதமாய காவிரி என்பார் சேக்கிழார். காவிரிக் கரையில்தான் விண்ணளந்து காட்டி வினைமறைக்கும் திருக்கோயில்கள் எண்ணற்றவை இன்றும் உள்ளன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் போற்றிப் புகழ்ந்த திருத்தலங்கள் நின்று புகழ்சேர்க்கும் நாடு காவிரிப் புனல் நாடு. அன்னை காவிரியே தன் இரு கரைகளிலும் உள்ள திருக்கோயில்களிலும் எழுந்தருளியுள்ள இறைவனுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து கொண்டே செல்லும் நாடு, காவிரி நாடு அறுபான் மூன்று நாயன்மார்களில் பலர் வாழ்ந்த நாடு. சோழநாடு திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்த புண்ணிய பூமி. காவிரி பாய்ந்து வளமூட்டும் பூமி. தமிழர் சமயம் இன்னதெனத் துணிந்து இலக்கணம் வகுத்த மெய்கண்டார் திருவவதாரம் செய்த தலமும் காவிரி நாட்டைச் சார்ந்ததேயாம். தமிழின் பின் சென்ற அரங்கன் உறையும் பதியும் சோழ நாடேயாம். தமிழின் நாட்டில் சோழநாடு வளம் கொழிக்கும் நாடு. வண்மை செழித்து வளர்ந்த நாடு. ஞானம் கொழித்த - கொழிக்கும் திருநாடு. யோகத்திலிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்த திருமூலர் தவம் செய்த நாடு. ஏன்? சிவபிரான் தமது அலுவலகத்தையே இந்த மண்ணில் மாற்றியமைத்துக் கொண்ட தலம் - திருவையாறு,