பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாயுமான சுவாமிகள்

421


நாற்பதாவது பாடலைக் கொண்டு சிவஞானத்தை உணர்த்தினார் என்பது மரபுவழி கிடைக்கும் செய்தி. “சித்தியில் ஓர் விருத்தப் பாதி போதுமே” என்ற சொல் வழக்கும் உண்டு. தாயுமானார் நாளும் ஞானநெறியில் வளர்ந்து வந்தார். பழுத்த துறவுமன நிலையையும் பெற்று வந்தார். நாடாண்ட அரசியின் காமத்திற்கும் உடன்பட்டாரில்லை. அரசுப் பணியிலிருந்து விலகி, திருத்தல யாத்திரை செய்யலானார். விராலி மலையில் சித்தர்களுடன் தங்கினார். ஆனாலும் சித்து விளையாட்டுக்களில் தாயுமானாருக்கு ஈடுபாடு வரவில்லை.

தாயுமானவருக்குத் திருமணம் நடைபெறுகிறது. தந்தையுமாகிறார். ஆனால், மனைவி சில ஆண்டுகளிலேயே இறந்து விடுகிறார். மனைவியைத் தொடர்ந்து தாயும் கால மாகிறார். இந்தச் சூழ்நிலையில் மீண்டும் கடுந்துறவினை மேற்கொண்டு கோவணத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். திருச்சிராப்பள்ளிக்கு வந்து மெளன குரு மடத்தில தம் குருவுடன் தங்குகிறார். பின் 1662-ம் ஆண்டில் இராமநாதபுரம் சென்று பரிபூரணம் அடைகின்றார்.

தாயுமானவர் பல்வகையாப்புக்களில் நிறையப் பாடியுள்ளார். தாயுமானவர் பாடல்களில் அளவிறந்த வடமொழிச் சொற்கள் பயிலுகின்றன. ஆயினும் செந்தமிழ்ச் சுவை குன்றி விடவில்லை. தாயுமானவர் வாக்குப்படியே மொழிக்கு மொழி தித்திப்பாக அமைந்தவை தாயுமானவர் பாடல்கள். பக்திச் சுவையும் ஞான வேட்கையும் ததும்பும் இயல்பின தாயுமானவரின் பாடல்கள். தாயுமானவர் பாடல்களை நாள்தோறும் ஓதினால் பொறிகள் அடங்கும்; புலன்களின் சேட்டை குறையும். ஏன்? மனமே கூட அடங்கும்.

தாயுமானவர் துறவி; துறவினையும் கடந்த துறவி. தாயுமானவருக்கு பக்தி உண்டு. ஆனால் பக்தி நெறியையும் கடந்த ஞானநெறியில் நின்றவர் தாயுமானவர். தாயுமானவர் ஞானி.