பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பழக்கங்களை இராமலிங்கர் கண்டித்தார் என்று கூறுவதாகப் பொருளில்லை. பழக்கங்களை அவர் கண்டிக்கவில்லை. பழக்கங்களினாலேயே மனிதனின் உள்ளுணர்வு தூண்டப் பெறுகிறது. புறச்சடங்குகள்-பழக்கங்கள் முதலியவற்றால், அமைந்து போய்க்கிடக்கிற- அடங்கிப்போய்க் கிடக்கிற - தம்பித்துப் போய்க்கிடக்கிற உணர்ச்சிகளை அசைத்து விடமுடியும். தூண்டிவிட முடியும். எனவே அறிவிற்கும் அனுபவத்திற்கும் தொடர்பின்றிச் சிந்தனைக்கும் செயலுக்கும் தொடர்பின்றித் தன்னிச்சையாகச் செய்கிற செயல்களைத்தான் வள்ளலார் கண்டித்தார்.

இன்று பலருக்குப் புராணக் கதைகள் தெரியுமே தவிர தத்துவங்கள் தெரியாது. இடைக் காலத்தில் இந்த நாட்டில் சமயம், சமயக்கல்வி, தூய உணர்வு, சமயப் பயிற்சி இவற்றையெல்லாம் யார் சொல்லிக் கொடுப்பது என்ற வரையறையின்றி, சொல்லிக் கொடுக்க உரிமையுடையவர் எல்லாம் தொழில் முறையில் மாறிப்போன பிறகு, சமயம் என்ற தேர் அக்குவேறு-ஆணி வேறாகப் பிய்த்தெறியப்பட்டு விட்டது. இந்தச் சூழ்நிலையில்-இந்தக் காலகட்டத்தில் இராமலிங்கர் பிறந்தார். அவர் தோன்றிய காலமே அழுகிக் கெட்டுப் போயிருந்த காலம்தான். இராமலிங்கர் மீதுள்ள பக்தியின் காரணமாக ஒருகால் அவர் காலத்தை நாம் பொற்காலம் என்று கருதிக் கொள்ளலாம். ஆனால், தமிழகம் கெட்டுப் போயிருந்ததை அவரே பல இடங்களில் நொந்து பாடியிருக்கிறார். அவர்காலம் ஒரு சோதனைக் காலம். அன்று, ஆறுமுக நாவலர் போன்றவர்களே இராமலிங்கரை எதிர்த்தார்கள் என்றால், பொறாமையினால் எதிர்க்கவில்லை. நாவலர் போன்றவர்கள் கொஞ்சம் பாரம்பரியமான வைதிக உணர்வுடையவர்கள். அவர்கட்கு வள்ளலார் போன்றவர்களின் சன்மார்க்க சமரச நெறி பிடிக்கவில்லை. நாவலர் போன்றோர் சாதி முதலிய எல்லாம் மறைந்து விடக்கூடாது என்பது போன்ற உணர்வுடையவர்கள். எனவே எதிர்த்தார்கள்.