பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளலார் நெறி I

431



(புதிய காற்றுச் சிலருக்குப் பிடிக்காது; சிலர் உடம்புக்கு ஒத்துவராது. பிடிக்காது என்றாலும், ஒரு சூழலை உருவாக்கித் தலைமீது சுமத்தி விட்டால் பின்னர் பரவாயில்லை என்று சொல்லி ஏற்றுக் கொள்வர்.) அரிசனங்களை ஆலயத்திற்குள் அனுமதியுங்கள் என்று அண்ணல் காந்தியடிகள் தொடக்கத்தில் கேட்டுக் கொண்ட போதெல்லாம் அதை உறுதியாக எதிர்த்து வந்த வைதிகர்கள், சட்டம் வந்த பிறகு பரிவட்டம் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். கடவுளுக்காக ஒத்துக் கொள்ளாதவர்கள் சட்டம் வந்த பிறகு, சட்டத்தின் பேரால் வருகிற பிரதிநிதிக்குப் பணிந்து ஏற்று நடைமுறைப்படுத்த முன்வந்தால் சட்டம் பெரிதா? சாத்திரம் பெரிதா? மக்கள் நலன் பெரிதா? தனிமனிதன் நலன் பெரிதா?

வள்ளலார், தமிழகத்தின் எல்லாவிதமான பழைய பாரம்பரியங்களையும் ஒத்துக் கொண்டார். திடீரெனத் தோன்றியவர் அல்லர் அவர் என்ற உண்மையினை,

‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட
மரபினில் யானொருவன் அன்றோ’.....

என்ற வரிகள் மூலம் அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நமது தமிழ் நாட்டின் வரலாற்றைத் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்தால் மேதைகள், ஞானியர்கள், வரலாற்றுப் பெரியோர்கள் இப்படித் தொடர்ந்து தோன்றி வாழ்ந்து வந்திருப்பதை யறியலாம். மாணிக்கவாசகரையும், அவரது திருவாசகத்தைப் பற்றியும் அவர் பாடுகையில்,

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

என்று குறிப்பிடுகிறார். மாணிக்கவாசகரின் திருவாசகத்தைக் கேட்டபொழுது, “கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும்;