பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32


வள்ளலார் நெறி II


தமிழகம் தெய்வமணம் கமழும் திருநாடு. இறைமணம் கமழும் இன்பத் திருநாடு. விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் திருக்கோயில்கள் அழகு செய்யும் திருநாடு. ஞானியர் பலர் தோன்றிய ஞானத் திருநாடு. தமிழக வரலாறு அரசியலால் பெற்றிருக்கும் ஏற்றத்தை விட ஞானத்தால் பெற்ற விளக்கம் அதிகம்.

தமிழகத்தின் சங்க காலத்து பக்குடுக்கை நன்கணியார் முதலாக வள்ளலார் காலம் வரை இடையீடின்றி ஒரு ஞானப் பாரம்பரியம் தொடர்ந்து வந்திருக்கிறது.

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன்
இன்னா தம்ம இவ்வுலகம்
இனிய காண்கிதன் இயல்புணர்ந்த தோரே

- புறம் 194

என்று பாடிய பக்குடுக்கை நன்கணியார் காலந் தொட்டு ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று

கு.இ.VIII.29.