பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொதுவாக, இன்றைய சமய நிறுவனங்களைச் சாதிமுறை ஆட்கொண்டதன் மூலம், உய்திபெற வேண்டிய மனிதனுக்கு உய்தியை வழங்கும் வழிபாட்டைத் திருக்கோயில்களில் தாமே நேரடியாகச் செய்து கொள்ளும் உரிமையில்லாதிருக்கிறது. செயல், சிந்தனையை வெளிப்படுத்துவது. செயல், சிந்தனையை வளர்ப்பது. செயல், சிந்தனையை நிலை பேறாக்குவது.

சமய உலகின் வழிபாட்டு நிறுவனங்களாகிய திருக்கோயில்களில் சாதாரண, சராசரி மனிதனுக்குத் தானே வழிபாடு செய்து கொள்ளும் உரிமை மறுக்கப் பட்டிருக்கிறது. வள்ளல் இராமலிங்கர் இது நியாயமற்றது என்பதைத் தமிழகத் திருக்கோயில்களில், யானை பூசித்தது; அணில் பூசித்தது; சிலந்தி பூசித்தது: எறும்பு பூசித்தது என்றெல்லாம் கூறுபவர்கள் மனிதனுக்குப் பூசனை உரிமையை ஏன் மறுக்க வேண்டும் என்று வினா எழுப்புகிறார்.

“...............போற்றுகின்ற
ஆடுங் கரியும் அணிலும் குரங்கும் அன்பு
தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும்-நீடுகின்ற
பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை
ஓம்புவதற்கு யார்தான் உவலாதார்?..........”

என்பது வள்ளற் பெருமான் கேள்வி. கி.மு. 42 இல் கண்ணப்பர் காலத்தில் கேட்ட கேள்வியையே 19ஆம் நூற்றாண்டில் வள்ளற் பெருமானும் கேட்கிறார். ஆனால், கண்ணப்பர் காலத்தில் சிவகோசாரியார் எழுப்பிய வினாவுக்குச் சிவபெருமானே விடை தந்தருளினார். ஆனால், சாதி, குல, கோத்திர வேற்றுமைக்கு ஆளாகிய மனித குலம், அந்த விடையை மீண்டும் அழித்து விட்டது. வள்ளலார்க்கு உண்மையான நினைவு நமது இந்து சமூகத்தில் நிலவும் சாதிகளை அகற்றி ஒரு குலம் அமைப்பதேயாகும்.