பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

33


அடுத்து “அப்பா” என்று விளித்தார். அம்மையப்பன் உறவுநிலை எத்தகையது? அப்பன் பொருள்! அம்மை பொருளின் ஆற்றல். அம்மை-ஆற்றலே அண்டமெலாம் பூத்து நிற்கிறது! பூத்த வண்ணம் காக்கிறது!

அம்மையின் ஆற்றல் பற்றுக்கோடாக நின்று செயற்படுவது அப்பனிடத்திலேயே. ஆதலால், “அப்பா” என்றார். மணிகளுள் சிறந்தது மாணிக்கம்! மாணிக்கம் ஒளி மிக்கது! ஒளிமிக்க மாணிக்கத்தினும் அப்பன் இறைவன் ஒளிமிக்குடையவன். இறைவனின் ஒளி வடிவம் ஒப்புவமை இல்லாதது. ஆதலால், “ஒப்பிலா மணியே” என்றார்.

வாழ்வியலில் அன்பே உயர்ந்தது. இறைவனுக்கு அன்பே உரிமைப்பொருள். ஆன்மாக்களிடம் இறைவன் விரும்புவது அன்பேயாம். ‘அன்பலாற் பொருளுமில்லை ஐயன். ஐயாறனார்க்கே” என்பார் அப்பரடிகள்.

அன்பு விரிவினையே விரும்பும். அன்பால் அனைத்தும் விரிவடையும். அன்புக்கு ஒப்பு அன்புதான்! அன்புக்கு அழிவில்லை. அன்பால் விளைவது ஆக்கம். அதனால் “அன்பினில் விளைந்த ஆரமுதே” என்றார்.

வாழ்க்கை குழந்தைமையில் தொடங்குகிறது. குழந்தமை நிலையில் பொய் இல்லை; குழந்தைகளுக்குப் பொய் சொல்லத் தெரியாது. குழந்தைகளுக்குப் பொய் சொல்லக் கற்றுக்கொடுப்பதே பெற்றோர்தான்! சமூகம்தான்!

கொடுங்கோன்மையும் ஆற்றலின்மையும் பொய்யைப் பிறப்பிக்கின்றன. பாபத்தின் கருவிகளில் தலையாயது பொய். ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து வரும் பருவங்கள் தோறும் பொய்யும் பெருகி வளர்ந்து வருகிறது. அதனால், ‘பொய்யினைப் பெருக்கி’ என்றார்.

அடுத்து, மனிதனின் வாழ்நாள் எல்லையில்லாததா? இல்லை! இல்லை! மனிதனின் வாழ்நாள் காலவரையறை - எல்லைக்குட்பட்டதேயாம்! மனிதர் தம் வாழ்நாளை