பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33


அருள் மழை!


தமிழகம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வறுமையும் சிறுமையும் பொருந்தி இருண்டு கிடந்தபோது ஒரு மழை பொழிந்தது. தொடர்ந்து பொழிந்தது; அது தமிழ் மழை, அருள் மழை, அருட்பா மழை. இம் மழையினால் தமிழகம் தழைத்தது. வள்ளலார் என்ற புயல் பெய்த மழை தமிழ் மழை. அருள் நலங் கனிந்த மழை, உயிர் தொடும் இனிய பாட்டுக்கள். ‘ஊன் படிக்கும் உயிர் படிக்கும்’ என்ற அடிகள் அருட்பாவிற்கே பொருந்தும். தமிழ்மொழி, ஆட்சியில் இருந்த ஆங்கிலத்தாலும் - மதத்தில் கொலுவீற்றிருந்த சமஸ்கிருதத்தாலும் ஓடுக்குண்டிருந்த போது தமிழுக்கு இனிய ஏற்றம் தந்து மக்கள் மன்றத்தில் உலவச் செய்த பெருமை வள்ளலாருக்கே உண்டு. “தமிழுக்கு அமுது என்று பேர்” என்று புரட்சிக் கவிஞர் பாடினார். தமிழ் அமுதமாக விளங்குவதை திருவருட்பாவினாலேயே உணர முடிகிறது. அமுது, சுவையில் சிறந்தது; இனிமை தருவது; மரணம் தவிர்ப்பது; இன்ப அன்பினை வளர்ப்பது. திருவருட்பாக்கள் ஆராத் தமிழ்ச் சுவையுடையன; உயிர் வாழ்க்கைக்கு இனிமை கூட்டுவன; மரண மிலாப் பெரு வாழ்வினை அளிக்குமியல்பின.

மனிதாபிமானத்தில் மிகச் சிறந்து விளங்கும் படைப்பு திருஅருட்பா. துன்பத்திற்கு மாற்று அருள். பிறர் துன்பம்