பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உய்வளிக்கும் தெய்வசிகாமணி

447


உயிர் வாழும்; தான் உழைத்து மற்றவர்களுக்கு நெல் முதலிய சுவை நிறைந்த நுகர் பொருள்களை வழங்கும்! எருதுகளின் உழைப்பில் விளையும் சுவையும் நலமும் செறிந்த பொருள்கள் மனித குலத்திற்கு! எருதுகள் சாரமற்ற வைக்கோலைத் தின்று உயிர் வாழும்! அதுவும் கூடத் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்! “உழுத நோன்பகடு அழிதின் றாங்கு” என்று புறம் பேசும். அறங்கள் செய்ய வேண்டுமாயின் அன்பின் ஆக்கமாகிய அருள் வேண்டும். இறைவனின் கருணையை அருள் என்று கூறுவது சமய மரபு; வழக்கு! ‘அன்பு எனக்கு அருளாம்’ என்பது திருவாசகம். இறைவனுடைய அருட்பார்வையால் தான் நமது உள்ளத்தில் அருள் முகிழ்க்க வேண்டும். “அருள் உண்டெனில் அறம் உண்டு”.

உயிர்க் குலத்திற்கு அருள் நலஞ் செறிந்த அறங்கள் செய்து வாழவேண்டுமெனில் பொருள் வேண்டும். அந்தப் பொருளும் நல்ல வழியில் ஈட்டிய பொருளாக இருக்க வேண்டும். “அவ்வருளும் நல்ல பொருள் உண்டெனில் உண்டு” பிறர் பங்கைத் திருடிய பொருள் நல்ல பொருள் ஆகாது. சலத்தாற் செய்த பொருள் நல்ல பொருள் அல்ல! பழியஞ்சி, பழிபடரா நிலையில் உழைப்பினால் திரட்டிய பொருளே நல்ல பொருள். நல்ல பொருளுண்டெனில் அறமுண்டு; இன்பமுண்டு. துய்ப்பன போக மலம் துய்க்கும் வாழ்நெறியே உய்யும் நெறியின் தொடக்கம். இன்பம் துய்த்தலும் பல வழிப்பட்ட செயலே! ஆயினும் உய்யுமாறு உய்த்துச் செலுத்தும் போகம் இன்பம்!

உய்யும் நெறியுணராமல் வாழ்தல் இருள் மலஞ் சார்ந்த வாழ்க்கை! இருள் உண்டெனில் பிறப்புண்டு! பிறவாமை வேண்டுமெனில் சிந்தையில் தெளிவு வேண்டும்! அத்தெளிவினுள் சிவம் விளங்குதல் வேண்டும். ஆன்மாக்களுக்கு இருள் உண்டெனில் இருளின் தொடர்ச்சியாகத் தெளிவு வரும்; தெளிவு உண்டு. ஆன்மிக வாழ்க்கையில் தெளிதல்