பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

35


மாந்தர் புழுத்தலையர் என்பதனைத் தன்மேல் ஏற்றி மாணிக்கவாசகர் ‘புழுத்தலைப் புலையனேன்’ என்றார். புலையன் எனில் கீழோன் என்பது பொருள். சண்டாளன் என்றுமாம்.

மனிதன் பொய்யினைப் பெருக்கிப் புழுத்தலைப் புலையனாக வாழ்ந்தாலும் இறைவன் ஆட்கொண்டருளத் தவறுவதில்லை. செந்தண்மையும் நேர்மையும் பொருந்திய சிவபதம் சண்டாளருக்கும் உரியது; புலையருக்கும் உரியது.

கல்லைப் பிசைந்து கனியாக்கும் திறனுடைய சிவத்திற்கு - வல்லாளனாகிய திருப்பெருந்துறைச் சிவத்திற்குப் புலைத் தன்மையை மாற்றி ஆட்கொள்வது எளிது! அதுவும் செந்தண்மைக்குரிய நலன்களை உரிமையாகவுடைய சிவத்திற்கு எளிது! எளிது!

இருளில் கிடந்து எய்த்துக் களைத்துப்போன ஆன்மாவுக்கு இன்பமே வழங்கும் சிவம், செல்வம்! அது உடைமைச் செல்வம் அல்ல; உயிர்ச் செல்வம்; உயிரோடு தொடரும் செல்வம்! சிவம் எனும் செல்வத்தினை-சிவகதி என்ற பேற்றினை எப்போது பெறுவது?

“செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்று எண்ணியிருப்பார் பித்த மனிதர்” என்று பாரதி எள்ளி நகையாடுவான். மாணிக்கவாசகர் “இப்பிறவியிலேயே, இன்றே, இப்போதே சிவபோகம்” என்றவர். “இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்! இனி எங்கேயும் எழுந்தருள இயலாது! என்றன் உடலிடத்தே இடங்கொண்டாய்!” என்று பேசுகிறார்.

மாணிக்கவாசகர், எதையும் வேண்டிப் பெற்றவரல்லர். சிவபெருமான் தானே வந்தாட்கொண்ட நிலை. “வேண்டு வதும் உன்றன் விருப்பன்றே” என்பது மாணிக்கவாசகரின் வாக்கு அருளுருவாகிய அம்மை மாணிக்கவாசகரை ஆட்கொண்டருளியது. அமைச்சுப் பணியில் இருந்த மாணிக்க