பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மரத்தடியில் ஆட்கொண்டருளுகின்றார். ஆனால் நினைந்தூட்டும் தாயினும் சால நல்லவன் கடவுள்! இறைவன் உயிர்களை ஒரு பொழுதும் மறப்பதில்லை. இறைவன் உயிர்களை ஒருபொழுதும் மறவாது காத்திருந்து உரிய பொழுதில் ஆட்கொண்டருளுகின்றான். ஆதலால் பால் நினைந்தூட்டும் தாயினும் நல்லவன் இறைவன்.

அதுமட்டுமா? இறைவனின் அருளிப்பாடுகள் அவ்வழி பெறும் அனுபவம் உயிர்களுக்குப் புதியவை. முன்பு எப்போதும் காணாதனவற்றைக் காட்டியும், கேளாதனவற்றைக் கேட்பித்தும் ஆட்கொண்டருள்கின்றான் புதுமையில் நாட்டம் உயிரியற்கை. சமய நெறிக்கும் புதுமை தேவையே. ஆதலால் முதலில் உயிர்கள் இறைவனின் ஆட்கொண்டு அருளும் நிகழ்வுகளுக்கு உடன்பட்டு நில்லா! ஏன்? மறுதலிக்கக்கூடச் செய்யும். ஆயினும் இறைவன் மிகவும் பரிவுணர்வுடன் நடந்து கொள்வான்!

தாய், குழந்தைகளின் தகுதிப்பாடு நோக்கி அன்பு காட்டுவதில்லை. அதுபோலக் கடவுள் உயிர்களின் தகுதி நோக்கி ஆட்கொள்வதில்லை. ஆட்கொள்வதற்கு முன்பும், ஆட்கொண்டருளிய பின்பும் இறைவனின் கருணைக்கும் பாத்திரமான உயிர்கள் தகுதிப்படுத்தப் பெறும்.

உயிர்களின் தகுதி எது? சிறப்பு எது? உயிர், உடலைக் கருவியாகக் கொண்டு உடலை வேலை வாங்குமானால் உயிர் தகுதியுடையது. உயிர்கள் இணைந்துள்ள உடம்பின் ஆளுகைக்கு உட்பட்டு உண்டியை, உடையை உவந்து வருமாயின் தகுதியுடையதல்ல என்பது கருத்து.

ஆதலால், உடல் ஆற்றலுடையதாக இருக்க வேண்டும். ஆனால், உடல் பெருத்தால் உயிர் சிறுத்துவிடும். உடலின் ஊனைப் பெருக்குவது தீது. உடல் ஊனை உருக்கி உயிரை வளர்ப்பது நல்லது. இதற்குக் கடவுளின் கருணை உண்டு.