பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

45


கடக்கும் அறிவாற்றலையும் உடல் வலிமையையும் பெறத் தக்கவகையில் நெறிப்படுத்த வேண்டும்.

முன்னேற்றம் என்பது வளரும் தன்மையது; மேலும் நிலையானது. முன்னேற்றத் திசையில் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் ஊன்றி நிற்றல் வேண்டும். இங்ஙனம் முன்னேற்றத் திசையில் வளர, வாழ நல்ல கண்காணிப்புத் தேவை. கண்காணிப்பும் தொடர் கண்காணிப்பாக இருக்க வேண்டும்.

இதனை நிர்வாக அறிவியல், தொடர் கண்காணிப்பு என்று கூறும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மாணிக்கவாசகர் நிர்வாக அறிவியல் சார்ந்த இந்த உண்மையை விளக்குகிறார்.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் ஆட்கொள்ளப் பெற்றார். அந்தம் ஒன்றில்லா ஆனந்தத்தைப் பெற்றார். இந்த ஆனந்த அனுபவமும் இடையீடுபடாமல் இருக்க மாணிக்கவாசகரைத் தொடர்ந்து இறைவன் பின் செல்கிறான். இறைவன் பின்னே செல்பவன். வீழ்ந்தால் தூக்கவேண்டும் என்றால் பின்னே வந்தால்தான் துாக்கமுடியும். இதனைப் ‘புறம் புறம் திரிந்த செல்வமே!’ என்றார். இன்றும் ஆட்சியியலில் அமைச்சர்களின் பாதுகாப்புக்குச் செல்பவர்கள் (Escort) பின்னே செல்கிறார்கள்!

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி-பெருக்கி
உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே! சிவபெரு மானே!
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுத் தருளுவது இனியே

(பிடித்த பத்து-9)