பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யான் இதற் கிலன் ஓர் கைம்மாறே!

(கோயில் திருப்பதிகம்–10)

என்ற பாடல் எண்ணி மகிழத்தக்கது.

பணி செய்யப் பணித்தருள்க!

மாணிக்கவாசகர் எம் பெருமானை, திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்புகின்றார். இறைவனை, “இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன்” என்று ஆய்வு செய்யும், முடிவுகள் கூறவும் முயன்ற உலகம் தோற்றுப்போயிற்று! எத்தனை உயிர்ப் பேதங்கள் உண்டோ அத்தனை மனங்களும் உண்டு. அவரவர் மனம் நினைந்திடும் உருவம், பெயர்தானே இறைவனுக்கும்!

ஆதலால் இறைவனைப் பற்றிய ஆய்வு தொடர்வதே ஆன்ம அனுபவ வளர்ச்சி; அளவுகோல்! அடையாளம்! இறைவன் எத்தகையவனாக இருந்தால் என்ன? அவன் மானுடத்தை ஆட்கொண்டருளத் திருவுள்ளம் கொண்டு விட்டனாயின் எங்கும் எவ்வுருவிலும் எழுந்தருளுவான்.

நமக்குத்தான் “அவன் சிவன்” என்று தேர்ந்து தெளியும் அறிவு தேவை! உணர்வு தேவை. இறைவன் திருஉத்தர கோசமங்கையில் எழுந்தருளியுள்ளான். அதை ஊராக உவந்துகொண்டு எழுந்தருளியுள்ளான்.

ஆதலால், மாணிக்கவாசகர், “எம் பெருமானே! எழுந்தருள்க; நந்தமக்கு அருளிப்பாடு செய்வதற்கல்ல! என்ன பணி செய்யவேண்டும்? பணித்தருள்க - பணி கொள்வதற்காக எழுந்தருள்க.” என்று பிரார்த்திக்கின்றார்.

இத்தகு பிரார்த்தனை சிறந்த பிரார்த்தனை! இந்தப் பிரார்த்தனை முறை நாடெல்லாம் வளரவேண்டும்.