பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்பநலத் துய்ப்பிற்குக் காரணமாக அமைவன. மனம் விருப்பமில்லாமல் செய்யும் வினைகள் எதிர்விளைவுகளைத் தரும். மனம் வெறுப்பால் செய்யும் வினைகளும் உண்டு. இத்தகு வினைகளின் விளைவு துன்பமேயாம். ஆதலால் வினை- தொழில் இன்பமோ துன்பமோ தருவதில்லை. வினைகள் இயற்றும்போது மனம் நிற்கும் நிலையைப் பொறுத்தே இன்பமும் துன்பமும் விளையும். வினைகளைச் செய்தவர்கள் அனுபவித்தே தீரவேண்டும். இது இயற்கை - நியதி! கடவுளின் ஆணை!

கையால் நெருப்பை அள்ளிக்கொட்டினால் கைகளுக்குச் சூடு உண்டு. கை புண்ணாகும். இது இயற்கை. இதுபோல வினைகளை மனம் அழுந்திச் செய்தால், விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகிச் செய்தால் அந்த வினையின் பயனை, செய்தவர் அனுபவிக்குமாறு செய்வது இயற்கை நியதி! இறைவனின் நெறிப்படுத்தும் தொழிற்பாடு! “ஊட்டும் வினை” என்பார் திருஞானசம்பந்தர். வினை செய்தலில் மனமே விளைவுகளுக்கு அல்லது எதிர் விளைவுகளுக்கு அடிப்படை என்பதற்கு எடுத்துக்காட்டு, சாக்கிய நாயனாரின் கல்லடியும் கண்ணப்பரின் செருப்படியும்! இவை இரண்டும் இறைவனுக்கு உவப்பாயின! காமவேனின் மலர்க்கணை உவப்பைத் தராதது மட்டுமல்ல. காமவேள் எரிய வேண்டியதாயிற்று. இவர்கள் வரலாற்றில் செய்த வினைப்பயன் கூட்டவில்லை. வினை செய்த நோக்கமும் உளப்பாங்குமே பயன் தந்தன. வினை இயற்றாமல் இருத்தல் கூடாது. வினைகள் இயற்றாமல் போனால் ஆன்மா வளராது; பக்குவப்படாது. குற்றங்களிலிருந்து விடுதலை பெறாது. வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டுவிடும். அதுவும் ஒருவிதத்தில் குற்றமேயாம்! ஆதலால் வினைகள் இயற்றி வாழ்தல் வேண்டும். செய்யும் வினைகள் - காரியங்கள் தற்சார்பாக அமையாமல் பொதுமை அடிப்படை காரணமாக அமைய வேண்டும்! புவியை நடத்தும் வினைகள் இயற்றுதல்-நடத்துதல் வேண்டும். அதேபோழ்து பொதுவில் நடத்துதல்