பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. இந்தச் சூழ்நிலையில் இறைவன் கருணையால் பிறவிச் சூழலைக் கட்டுப்படுத்தி ஆட்கொண்டருள எண்ணி அருள்பாலிக்கிறான். இறைவன் வினைகள் இயற்றி வாழும் மாந்தரிடத்தில் தாயாக, தந்தையாக, ஆசிரியனாகக் காட்சி தருகின்றான். ஆனால், இந்த ஆட்கொள்ளலை எந்த ஆன்மாவும் விரும்புவதில்லை; விரும்பி வரவேற்பதில்லை. ஆனாலும் மனிதகுலம் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாது போனாலும் சரி, இறைவன் உயிர்க்குலத்தை உய்யும் வகையில் எல்லாம் ஆட்கொண்டருளத் தவறியதில்லை. அவனே வலிந்து செய்யும் கருணை நிறைந்த கடமை இது.

சாதாரணமாக உலகியலில் உயிர் நிலையில் உள்ளவர்களிடம் தாழ்ந்தவர்கள் போய் அறிமுகம் செய்து கொள்வதே பழக்கம். ஆனால், இறைவன் ஆட்கொண்டருளும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதெல்லாம் பெரியோனாகிய இறைவன், அவனுடைய கருணையினால் ஆட்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ள உயிர்களிடம் தாமே போய் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிலையே நடைமுறை. இந்த மண்ணகத்தில் வினைகள் இயற்றுதல், இலாபம் ஈட்டல், புகழ் பெறுதல், அதிகாரம் செய்தல் அம்மம்ம! எத்தனை வினைகள்! எத்தனை எத்தனை செயல்கள்! இந்தச் செயல்களைச் செய்யும் பொழுதெல்லாம் பொறிகளில் படியும் கறைகள்! புலன்களில் ஏறும் அழுக்குகள்! ஆன்மாவில்- உயிரில் ஏற்படும் விகாரங்கள்! இவையெல்லாவற்றையும் பொருட்படுத்தாது அழுக்குடலேயானாலும் அழுக்கேறிய ஆன்மாவேயானாலும் தாயினும் சாலப்பரிந்து ஆட்கொள்ள இறைவன் வருகின்றான். ஆனால் ஆன்மாக்கள் ஆட்பட ஒருப்படுவதில்லை. விரும்புவதில்லை. அறுவை மருத்துவத்துக்குப் பயந்து நோயினால் தொல்லைப் படுவாரில்லையா? பத்தியத்துக்குப் பயந்து நோய்ப்படுக்கையில் கிடப்பாரில்லையா? அதுபோலத்தான்.