பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அடிகளாரின் சமய இலக்கியப் பணிகள்

பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்

நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்


தமிழ்மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ்கூறு நல்லுலகில் - சமய மறுமலர்ச்சிக்கு வழிகண்டவர். அடிகளார் பூர்வாசிரமத்தில் செட்டிநாட்டில் எங்கள் ஊராகிய இராமச்சந்திரபுரத்தில் உயர்நிலைக் கல்வி பயின்றார்கள். எங்கள் தந்தையார் குங்கிலியம் பழ. சண்முகனார் அவர்களும், அடிகளாரின் அண்ணன் அவர்களும் விநோபா பாவே வாசகசாலையைத் தொடங்கினர். அடிநாள் தொட்டு அடிகளாரை நான் நன்கறிவேன். அடிகளார் திருவண்ணாமலை ஆதீனத்தில் பொறுப்பேற்ற பின்னர் சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினார்கள். முதன்முதலில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் அடிகளார் அவர்களும் நாங்கள் நடத்திய தமிழர் திருநாள் திருக்குறள் விழாவில் ஒரே மேடையில் பேசினர். அப்பொழுது ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் சந்திக்கின்றன என்ற செய்தியை வியப்புடன் நாளிதழ்கள் வெளியிட்டன.

50, 60களில் அடிகளார் தமிழ்மேடைக்குத் தம் பேச்சால் புதிய வலிமை சேர்த்தார்கள். தமிழகம் முழுவதும் அடிக்கடிபயணம் செய்யும் நான் அடிகளாரின் நூற்றுக்கு மேற்பட்ட பொழிவுகளைச் செவிமடுக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன்.அடிகளார் நூல் பலவற்றைப் படிக்கும் பேறும் பெற்றேன். அப்பொழுதெல்லாம் அடிகளார் சிந்தனைகள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்க வேண்டும் என்ற வேணவா என்னுள்ளத்தில் முகிழ்த்தது. அது இன்று கைகூடுகிறது.