பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் – ஒரு நாகரிகம்

101


லிடுவது; எரியாத ஏடுதாங்கிய மந்திரமே மந்திரம், மறை மொழியே மறைமொழி; அதற்குரிய சமயமே சமயம் என்று உறுதி செய்தனர். திருஞான சம்பந்தர், "தளரிள வளரொளி' என்று தொடங்கும் பாடலின் ஏட்டைத் தீயிலிட்டார். சமண முனிவர்கள் தாம் பொருளெனக் கொண்ட மந்திரத்தை எழுதித் தீயில் இட்டனர். சமணர்கள் இட்ட மந்திர ஏடு எரிந்து சாம்பலாகிவிட்டது.

தோற்ற சமண முனிவர்களுக்கு உண்மையை ஒத்துக் கொள்ள மனம் வரவில்லை. மீண்டும் திருஞான சம்பந்தரை வாதுக்கு அழைக்கின்றனர். திருஞானசம்பந்தரும் உடன்படுகின்றார். கடைசியாக அவரவர் சமய மறைமொழி, மந்திர மொழியில் எழுதிப் போட்ட ஏடு வைகையாற்றின் வெள்ளப் போக்கில் செல்லாமல் அந்த வெள்ளத்தை எதிர்த்து வரவேண்டும் என்பது நிபந்தனை. இந்த வாதில் தோற்றால் தாங்கள் அனைவரும் கழுவேறுவதாகவும் சமணர்கள் மன்னர்முன் சூளுரை ஏற்றனர். திருஞானசம்பந்தரும் உடன்பட்டார். திருஞானசம்பந்தர்,

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஒங்குக
ஆழ்க தீயதெல் லாம்.அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே"

(மூன்றாம் திருமுறை-திருப்பாசுரம். பா-1)


என்று தொடங்கும் பதிகத்தை எழுதி வைகையாற்றில் இட்டனர். சமணர்கள் "அத்திநாத்தி" என்ற மந்திரத்தை எழுதி வைகையாற்றில் இட்டனர். திருஞான சம்பந்தரின் மறைமொழி தாங்கிய ஏடு வைகையாற்று வெள்ளத்தை எதிர்கொண்டு ஏறி வந்தது. சமணர்கள் இட்ட ஏடு வெள்ளத்தோடு போய்விட்டது. சமணர்கள் இரங்கத் தக்க நிலைக்கு ஆளாகித் தாமே எடுத்துக் கொண்ட சூளுரைக்கேற்பக் கழுவேறினர்.