பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

107


தெளிந்தும் காப்பியத்தை இயற்றித் தந்துள்ளார். சேக்கிழார் இயற்றிய காப்பியத்தில் வரும் நாயகர்கள் கி.பி.300 முதல் கி.பி. 865 வரையுள்ள கால எல்லையில் வாழ்வாங்கு வாழ்ந்து வெற்றி பெற்ற அடியார்கள். அவர்களின் வரலாற்றைச் சேக்கிழார் தொகுத்துக் கூறியுள்ளார். அதாவது சேக்கிழார் காப்பியத்தில் வரும் நாயகர்கள் ஏறத்தாழ 600 ஆண்டுகள் இடை வெளிக் காலத்தில் வாழ்ந்தவர்களாகின்றனர். கண்ணப்பர், இயற்பகை நாயனார் போன்றவர்கள் கிறித்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர்கள் என்னும் ஒரு கருத்து உண்டு. இந்தக் கால எல்லையில் ஒரு நாட்டில், ஒரு சமுதாயத்தில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருக்க கூடும்? அதுவும் முறையாக வரலாற்றை எழுதி வைக்கத் தெரியாத சமுதாயத்தில், பரவலாக அங்கும் இங்குமாக வாழ்ந்த அடியார்களின் வரலாற்றையெல்லாம் கண்டும் கேட்டும் அறிந்து காப்பியத்தை இயற்றியுள்ளார் சேக்கிழார். இஃதோர் அருமையான பணி! அரிதின் முயன்று முடித்த பணி! முயற்சியின் அருமை அறிந்தோர் பாராட்டுதில் வியப் பென்ன? காப்பியத்தில் வரும் நாயகர்கள் பல்வேறு குலத்தினர்; சிலர் நாடறியத் தொண்டு செய்தவர்கள்; பலர் எங்கோ ஒரு மூலையில் எளிமையாக இருந்து கொண்டு செய்தவர்கள். இத்தகையோர் அனைவரின் வரலாற்றையும் சேக்கிழார் கண்டறிந்து எழுதியது ஒப்பற்றசாதனை. முதல் நூலினைத் தொடர்ந்து வரும் விரிவுநூல் இலக்கிய அமைப்பிலேயே வடிவம் பெறும். திருத்தொண்டத் தொகையாகிய முதல் நூலைத் தொடர்ந்து விரிவு நூல் செய்த சேக்கிழார் வரலாற்றுப் போக்கில் செய்திருப்பது அருமையான படைப்பு. இது போல் சேக்கிழாருக்கு முன்பும் யாரும் செய்ததில்லை, பின்பும் யாரும் செய்யவில்லை. திருத்தொண்டத் தொகையின் விரிவு இலக்கிய நலம் செறிந்த வரலாற்று நூலாக மலர்ந்திருக்கிறது; தத்துவ நூலாக உருப் பெற்றிருக்கிறது. மெய்ப்பொருளியல் விளக்கும் நூலாகக்