பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிடைத்திருக்கிறது. ஞான நெறியினை விளக்கும் ஞானப் பனுவலாக அமைந்திருக்கிறது.

செழுந்தமிழ் வழக்கே சேக்கிழார் குறிக்கோள்

சேக்கிழார் வாழ்ந்த காலத்தில் அவர் பல்வேறு தர்க்கங்களுக்கு ஆளாகியிருக்கின்றார். அது மட்டுமன்று சேக்கிழாரின் காப்பியத்தில் வருகிய நாயகர்களில் பலர் சமுதாய வரலாற்றுக் களங்களில் நின்றவர்கள்; அறைகூவல்களைச் சந்தித்தவர்கள். தமிழினமும் தமிழும் தமிழ் நெறியும் காலத்தால் முந்நியன. ஆயினும் இவை காலத்துக்குக் காலம் சந்தித்து வந்துள்ள அறை கூவல்களின் காரணமாகப் பல்வேறு இடர்ப்பாடுகளை அடைந்துள்ளன. தமிழ் வரலாறு தேக்க நிலை அடைந்திருக்கிறது. பல சமயங்களில் தமிழையும் தமிழ் நெறியையும் பாதுகாக்க அரசையே கூட எதிர்த்துப் போராட வேண்டியதிருந்திருக்கின்றது. அத்தகைய துணிவு மிக்க வரலாறுகள் பெரிய புராணத்தில் பலவுண்டு. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை திருஞான சம்பந்தர் வரலாறும் திரு நாவுக்கரசர் வரலாறுமாகும். சேக்கிழாரின் திருவுள்ளம் உலகம் தழிஇய ஒட்பமுடையது. ஆயினும் திசையனைத்தின் பெருமையெல்லாம் தென் திசையே வென்றேற வேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்டிருந்தவர், அவர், அசைவில் செந்தமிழ்வழக்கு அயல் வழக்கை வென்று விளங்க வேண்டும் என்ற நோக்குடையவர். ஏழாம் நூற்றாண்டில் அயல் வழக்கை செழுந்தமிழ் வழக்கு வென்று விளங்கியது. ஆயினும், அந்த வெற்றி வாழ்க்கை தொடரவில்லை. மீண்டும் தொய்வு! இருள் படர்ந்த நிலை! மயக்க நிலை! இந்த நிலையில்தான்் சேக்கிழாரின் திருத்தொண்டர் வரலாறு என்ற ஞானக் கதிர் இருள் கடிந்து எழுகின்றது. செந்தமிழ் வழக்கு நெறி நெறி இதுவென உணர்த்தியது. செழுந்தமிழ் நெறியில் நின்று. வாழ வழிகாட்டியது.