பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெறியே சைவ நெறியாகாது. முன்னையது பொது, பின்னையது சிறப்பு.

அயல்வழக்கு

திருஞானசம்பந்தர் காலத்தில் பெளத்த, சமண சமயங்கள் தமிழகத்திற்குள் வந்துவிட்டன. அயல் வழக்கு என்று சேக்கிழார் கருதுவது பெளத்தத்தையும் சமணத்தையு மேயாம் அவை எப்படி அயல் வழக்காயின?

இந்தியாவின் வடபகுதியில் ஆரியமதம் கால் கொண்டிருந்தது. இது பெரும்பாலும் உயர் குடியினராகிய பார்ப்பனரின் மதமாக இருந்தது. கடுமையான வருணாசிரம வேறுபாடுகளை இந்த மதம் நடைமுறைப்படுத்தியது. வேள்வி முதலியன உயிர்ப்பலியுைம் வற்புறுத்தியது. சமூக ஏற்றத் தாழ்வுகள் இன்பதுன்பங்கள் ஆகியன விளையின் விளைவுகள் என்று ஒதின. இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள இயலாத நால்வகை வருணத்தில் போர் செய்வதையும் ஆட்சி செய்வதையும் பிறப்புரிமையாகப் பெற்றிருந்த சூத்திரிய வமிசத்தினர் ஆரிய மதத்திலிருந்தும் ஆரிய புரோகிதர்களிடமிருந்தும் விடுதலை பெறுவதற் காக-தன்னாட்சி அமைப்புக்காகச் சமண பெளத்த சமயங்களைக் கண்டனர். வடக்கே ஒரளவு அச்சமங்களுக் கேற்ற சூழலிருந்ததால் பரவ முடிந்தது. ஆனால் தமிழகத்தில் இதற்கு முற்றிலும் மாறான சூழ்நிலை. தமிழ் மக்களுக்கு அவர்களுடைய சொந்த வாழ்வில் தோன்றிய சைவ வைணவ நெறிகளே சமயங்களாக விளங்கி வந்தன. இவை நெறிகள்; வாழ்வோடியைந்த சமயங்கள். பிறப்பின் அடிப்படையில் மனிதகுல வேறுபாட்டைக் கற்பிக்காத சமயங்கள். வினை வலியை நம்பினாலும் போரிட்டு, அதனை வெற்றிபெற இயலும் என்ற வழி நடத்திய சமயங்கள். ஆதலால், சமண பெளத்த சமயங்கள் நிலப்பகுதியினால் மட்டுமல்ல, வாழ்க்கை முறையினாலும் அயல்வழக்கு நெறிகளாயின.