பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

121


-என்று பாராட்டினாலும் இயற்கைக்கும் உள்ளிடாக இருந்து இயக்கும் இறைவனை அறிந்து பாராட்டும் இது தமிழ் மரபு! காலத்தின் காரணமாக மாறாத ஒன்றே இறைத்தன்மை உடையது. கடவுள் ஒருவனே காலத்தத்துவத்திற்கு அப்பாற் பட்டவன், கடவுள் தன்மையே மாறாதது, கடவுள் தத்துவத்தில் ஒரோவழி மாற்றம் உண்டெனினும் அஃது அடிப்படை மாற்றமன்று. மானுடத்தை, உய்வார்கள் உய்யும் வகை ஆட்கொள்வதற்காகத் தாமே ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றமே அது. ஆட்கொள்ளும் பொருள் அளப்பிலாற்றலுடையது. ஆட்கொள்ளப்படும் உயிர் அளவுக்குட்பட்ட ஆற்றலுடையது. அதனால் அளப்பிலாற்றலுடைய பொருள் அதன் இயல்பிற்கேற்ப மாறுகிறது.

சேக்கிழார் தீட்டிய இயற்கை ஒவியம்

சேக்கிழார் திருமுறை நெறிகளைச் சார்ந்து இயற்கையைச் சைவப்பார்வையில் பாராட்டும் இடங்கள் நினைத்து நினைத்து கற்கத்தக்கன! கழனியில் கதிர்கள் முற்றி விளைந்துள்ளன. முற்றி விளைந்த கதிர்கள் ஒன்றையொன்று தழுவிச் சாயும் இயல்பின. இதனைக் கண்ணுற்ற சேக்கிழாரின் சிந்தை மகிழ்கிறது. சிவனடியாரின் இயல்புகளோடு இக்காட்சியை ஒத்துப் பார்க்கிறார் சேக்கிழார் பெருமான்! பத்திமை உணர்வில் விளைந்த அடியார்கள், பரமனுக்கு ஆட்பட்ட்வர்கள் கூடினால் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு தலைவணங்கி மகிழ்வர்! அப்படி வணங்குதல் வித்தகத்தின் பயன். அடியாரை வணங்காமை ஆணவத்தின் விளைவு. இன்று வணங்கி மகிழ்தல் நம்மிடையில் இல்லை. யார் பெரியர் என்று ஆய்வே எங்கும் நிகழ்கிறது. இந்த ஆய்விற்குத் துறவிகளும் விலக்கல்லர்; பிறிதொருவரை வணங்காமையே, பெருமைக்கு அழகு என்ற பொய்யர்தம் மெய் இன்று உலா வருகிறது. வேண்டாம் இத்தகு தீமை! வணங்குதல்