பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

123



அகனைந்திணை மரபு 

தமிழ் மரபு அகனைத்திணை மரபு! அதாவது காதல் வாழ்க்கை! தமிழ் மரபில் பெண்மை பெருமையுடையது. பாண்டிய நாடு அகனைந்திணை வாழ்க்கைக்குரிய நெறிகாட்டும் அகப்பொருள் இலக்கணம் இழந்ததை அறிந்து இறைவனே தமிழ் நிலம் உய்யுமாறு அகப் பொருளிலக்கணத்தை அருளிச் செய்தான் என்பது வரலாறு. இறையனார் அகப்பொருள் என்பது அந்த நூலின் பெயர். உலக மொழிகளில் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் உண்டு! ஆனால் வாழ்க்கைக்கு இலக்கணம் இல்லை! வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்டது தமிழேயாம்! ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் அறத்திற்கு அகப்பொருள் இலக்கணமும், அக்குடும்பம் நின்று நிலவும் சமுதாய நிகழ்வுக்கும் உறவுகளுக்கும், சமுதாயமேல் வரம்பாகிய அரசிற்கும் புறப்பொருள் இலக்கணமும் என்று கண்டது தொல்காப்பியம்!


அம்மையப்பன் திருக்கோலம்

வீடு பேற்றுக்குரிய வாயில் துறவே என்பது தமிழ் மரபுக்கு உடன்பாடுடையதன்று. தமிழரின் வழிபாட்டுத் திருவுருவம் அம்மையப்பரின் திருமேனியாகும்.

"நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே!


(ஐங்குறுநூறு-கடவுள் வாழ்த்து)


என்று ஐங்குறுநூறு பேசும். தமிழ்ச்சமய நெறியில் நிலவும் கடவுள் திருமேனிகளில் அம்மையப்பன் திருவுருவமே தொன்மையானது என்பார் மாணிக்கவாசகர்.