பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று பாடுகிறார். காமன்தன் பெருவாழ்வு சிவனருளில் சென்று சேர்கிறது என்ற குறிப்பு அறிந்து இன்புறத்தக்கது. சுந்தரரைக் கண்ட பரவையார்,

"முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ?
பெருகொளியால்
தன்னேரில் மாரனோ? தார்மார்பின் விஞ்சையனோ?
மின்னேர்.செஞ் சடைஅண்ணல் மெய்யருள்பெற்
றுடையவனோ?
என்னேஎன் மனந்திரித்த இவன்யாரோ
எனநினைத்தார்

(தடுத்தாட்கொண்ட புராணம்-144)


என்று நினைந்து வியந்து பாராட்டுகிறார். இருவர் நினைப்பும் காதலில் தொடங்கி இறைவன் அருளில் முடிவதை எண்ணுக! எண்ணி எண்ணி இத்தகு காதல் நெறி இவ்வையகத்தில் நிலவத் தவம் செய்க! சுந்தரர் பரவையாருடன் கூடித் திருவாருரில் வாழ்ந்ததை,

"தென்னாவ லூர்மன்னன் தேவர்.பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும் மெல்லியல்
தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்”


(தடுத்தாட் கொண்ட புராணம்-181)


என்று விளக்கும் பாடலால் தமிழ் வழிப்பட்ட மனையறத்திற்குக் கொடுத்த பெருமையை ஓர்க! உற்றறிக! அதுபோலவே சங்கிலியாரிடத்தில் சுந்தரரின் விருப்பத்தை உணர்த்த சென்ற சிவபெருமான் சங்கிலியாரிடம் சுந்தரரை அறிமுகப்படுத்தும் பொழுது பாடும் பாடல் அருமையிலும் அருமை.