பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யாக்கும் கருவியாகவும், திருவருளை அடைதற்குரிய கருவியாகவும் கண்டு போற்றினர். சேக்கிழார் பெரிய புராணத்தில் வரும் அடியார்களில் பலர் நல்ல கலைஞர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணரும், ஆனாய நாயனாரும் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களாக விளங்கியவர்கள். தேவாரம் பாடிய மூவரும் நல்ல இசைப்பாடல்கள் பாடியவர்கள். திருஞானசம்பந்தர் இன்னிசையால் தமிழ் பரப்பினார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருடைய தமிழிசைப் பாடல்களைக் கேட்பதற்காக இறைவன் நாளும் காசு தந்தனன். ஆதலால் சுந்தரர்,

"ஏழிசையாய் இசைப்பயனாய்”

(திருமறை 7-21-10)


என்று இறைவனைப் பாராட்டுவார். ஆடல் வல்லான் சுந்தரரின் பாடலில் ஒன்றிக்கலந்து போனதால் சேரமான் பெருமான் நாயனார் பூசைக்குச் செல்லக் காலம் தாழ்த்திற்று என்று சிவபெருமானே அருளிச் செய்ததாகச் சேக்கிழார் கூறும் பெற்றிமை அறிக.

"மன்றி னிடைநம் கூத்தாடல்
வந்து வணங்கி வன்தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப்போற்றி
உரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத் தாழ்ந்தோம்
என்றார் அவரை நினைப்பிப்பார்.”

(கழறிற்றறிவார்-44)


ஆதலால் வாழ்க்கையை இம்பமயமாக்கம் கலைகளைப் புறக்கணித்த அயல்வழக்கினை மறுத்துக் கலைகளைக் கடவுட் சாதனமாக ஏற்றுப்போற்றிய சேக்கிழார் செழுந்தமிழ் வழக்குக்கு அரண் செய்துள்ளார்.