பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாம் இன்று கூடியிருக்கிறோம். ஆதலால் சேக்கிழார் திருக்கோயிலை மையமாகக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கத் திருவுள்ளம் பற்றினார். அதுவே செழுந்தமிழ் வழக்கு.

சேக்கிழார் தமது அருமையான காப்பியத்தைச் செய்து நமக்குத் தந்தது இற்றைக்கு 800 ஆண்டுகட்கு முன்பாகும். இன்று நம்முடைய சமய வாழ்க்கையில் சேக்கிழார் இடம் பெற்றள்ளாரா, என்பதை அன்பு கூர்ந்து எண்ணுங்கள்! சேக்கிழார் தமிழ் மக்களின் வாழ்க்கையை அயல் வழக்கிலிருந்து மீட்க-தமிழ் நெறிப்படுத்தக் காப்பியம் செய்தார். சேக்கிழார் காப்பியத்தில் சிந்தனை உண்டு; கவிதை உண்டு; காப்பிய நலன்கள் உண்டு, சைவசீலம் உண்டு; திருவருள் பொலிவும் உண்டு. இவை மட்டுந்தானா? நாம் எப்படி வாழ்தல் வேண்டும் என்ற உண்மையில்லையா? சேக்கிழாரைப் படித்தால் போதாது ஓதினாலும் போதாது. உணர்தல் வேண்டும். நாம் சைவ நெறியின் சீலத்தை மேற்கொள்ள வேண்டும். திருத்தொண்டில் ஈடுபடவேண்டும். அறுபத்து மூவரில் எந்த ஓர் அடியார் செய்த திருத்தொண்டையாவது நாம் இன்று எடுத்துச் செய்யக் கூடாதா! நம்முடைய திருமடங்கள் செயற்படக் கூடாதா? நம்முடைய திருக்கோயில்கள் திருத்தொண்டின் பண்ணைகளாக மாறக்கூடாதா? தடை என்ன? மரபுகள் வழிகள் வழி நிற்றல் என்ற பெயரில் இடைக்காலத்தில் அயல்வழக்காக வந்த வாழ்க்கைக்கு ஒவ்வாத வெற்றுச்சடங்குகள், ஆரவாரங்கள், புன்மைத் தன்மையுடைய சாதி வேற்றமைகள், உயர்வு என்ற பெயரால் சமுதாயத்தினின்றும் ஒதுங்கி வாழ்தல் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டு தமது அறியாமையை மரபின் மீதும் சைவத்தின் மீதும் ஏற்றுதல் முறையோ? ஒருக்காலும் முறையாகாது.

இன்றைய தமிழகத்தை நன்னெறிப் படுத்துதற்குரிய ஒரே காப்பியம் சேக்கிழார் காப்பியமேயாம். சேக்கிழார்