பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களையும் பயில்வதனால் நாம் உயர்கின்றோம். "சான்றோர் தம் வாழ்க்கை நிலை, நாமும் நம்முடைய வாழ்க்கை நிலையை இறப்ப உயர்ந்ததாகச் செய்து கொள்ளுதல் கூடும் என்பதை நினைப்பூட்டுகின்றது” எனவும், "வாழ்க்கையில் வழியற்றுக் கலங்கும் மக்களை, அது நல்வழியிற் செலுத்தும் இயல்புடையது” எனவும் வரும் Longfellow என்ற மேனாட்டுப் புலவரின் பொருளுரைகள் சிந்தித்துணரத் தக்கன. அந்த அடிப்படையில் திருமுறை ஆசிரியப் பெரு மக்களது வாழ்க்கை வரலாறுகளும், அவர்களது அருண் மொழிகளும் மக்களை உயர்த்துவனவாம்.

மக்களை அறத்துறையில் ஆற்றுப்படுத்தி அருள்நெறி நின்றொழுகச் செய்வனவாம் இத்தகு திருமறைகளை நாம் போற்றிப் பாராட்டாது வாளா இருந்து மக்களது மனத்திலே இடம் பெறாத நிலைக்கு விடுவோமானால் நாம் அருளறத்தையே சிதைத்தவர்கள் ஆவோம். திருமுறைகளின் பயிற்சி மக்களிடையே பெருகி அமைந்து, அதனாலாய அற உணர்ச்சியும், அருளுணர்ச்சியும் இல்லையானால் இவ்வுலகில் திருமறைகளுக்கு எந்த நிலையைச் சொல்வது? பெரும்பான்மையும் மறைந்தது போலத்தான்ே! ஜான் மில்டன் என்ற பெரும்புலவர், நல்ல புத்தகங்களை அழிப்பது நன்மையையே அழிப்பதாகும்; அச்செயல் நல்ல மனிதர்களைக் கொல்வதைவிடக் கொடியதொரு செயலுமாம் என்று கூறுகின்றார். "As good almost kill a man as kill a good book; who kills a man kills a responsible creature, god's image; but he who destroys a good book kills reason itself" என்பது அன்னாரின் தெருளுரை. எனவே திருமுறைகளைப் போற்றிப் பரப்புகின்ற அருட் பணியை நாம் செய்யவில்லையானால் அருட்பெருமக்கள் கண்டு, நால்வர்களின் நல்லருள் உணர்ச்சியால் வளர்க்கப் பெற்ற அருளறத்தை அழித்தவர்களாவோம். அத்தகையதொரு கொடிய தீங்கு நம்மை வந்து சாராவண்ணம் நாமே காத்துக்கொள்வோமாக.